பச்சை சுண்டைக்காயில் இப்படி குழம்பு வைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாது தெரியுமா? ஆரோக்கியமான இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.

kulambu
- Advertisement -

நம்முடைய உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களை நாம் உணவு பட்டியலில் இருந்து நீக்கி விட்டோம். அந்த வரிசையில் இந்த பச்சை சுண்டைக்காயும் ஒன்று. கசப்புத் தன்மையைக் கொண்ட இந்த பச்சை சுண்டைக்காயை பெரும்பாலும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. இந்த பச்சை சுண்டைக்காயை வைத்து ஒரு முறை பின் சொல்லக்கூடிய முறையில் குழம்பு வைத்து பாருங்கள். நிச்சயமாக கறி குழம்பே தோற்றுப் போகும் அளவிற்கு இதன் ருசி இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த குழம்பை பக்குவமாக வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வில்லை என்றால் கூட 3 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி வாங்க, நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிப்பியை தெரிந்து கொள்வோம்.

முதலில் 1 கப் அளவு அதாவது, 100 லிருந்து 150 கிராம் அளவு சுண்டைக் காய்களை எடுத்து சுத்தம் செய்து லேசாக நசுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த குழம்பிற்கு ஒரு அரவையை தயார் செய்யவேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 பல், தோல் உரித்த பூண்டு பல் – 6, வர மல்லி – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 5, கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எல்லாப் பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (தேங்காய் நன்றாக வறுபடவில்லை என்றால் அடுத்த நாளைக்கு குழம்பு கெட்டுப்போகும்.)

sundaikai

அடுப்பில் ஒரு கடாயை வைத்து – 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், தோல் உரித்த சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – 5, தோலுரித்த பூண்டு பல் – 6, ஒரு கொத்து கருவேப்பிலை, இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இப்போது தயாராக வைத்திருக்கும் சுண்டைக் காய்களை எண்ணெயில் போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி விட வேண்டும். சுண்டைக்காயில் இருக்கும் கசப்புத்தன்மை அப்போதுதான் நீங்கும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி பழம் – 1, உப்பு தேவையான அளவு, சேர்த்து தக்காளி பழத்தை நன்றாக வதக்கி விடுங்கள்.

தக்காளிப் பழத்தின் பச்சை வாடை நீங்கியதும் பெருங்காயம் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சேர்த்து இந்த மசாலாப் பொருட்களை சுண்டைக்காயுடன் ஒருமுறை கலந்து விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி 2 நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள். இறுதியாக சிறிய எலுமிச்சம்பழ அளவு புளிக்கரைசலை கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, உப்பு சரி பார்த்து, மூடி போட்டு 8 நிமிடங்கள் குழம்பை சுண்ட சுண்ட கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து, சுடசுட சாதத்தோடு இந்த குழம்பை சேர்த்து பரிமாறி பாருங்கள். பிறகு இந்த குழம்பின் சுவை உங்களுக்கே தெரியுங்க.

- Advertisement -