ஆச்சி செய்து கொடுக்கும் பால் கொழுக்கட்டை பாரம்பரிய முறையில் எளிதாக இப்படி செய்து பாருங்கள்! உங்கள் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

paal-kozhukattai-recipe
- Advertisement -

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் நல்ல நாட்கள், பிறந்த நாள், விசேஷம் போன்ற எல்லா தினங்களிலும் வீட்டில் பால் கொழுக்கட்டை செய்து கொடுப்பது வழக்கம். நம் தாய்மார்கள், அவர்களுடைய தாய்மார்கள் என்று வழிவழியாக இந்த பால் கொழுக்கட்டை எப்படி சுவையாக செய்து கொடுத்தார்கள்? அதே சுவையுடன் சுவை மாறாமல் பாரம்பரிய பால் கொழுக்கட்டை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப், தேங்காய் துண்டுகள் – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன், சுக்கு பொடி – கால் டீஸ்பூன்.

- Advertisement -

பால் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
ஒரு கப் அளவிற்கு பச்சரிசி மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கப் அளவிற்கு ஒரு கப் தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி மாவிலிருந்து 2 டீஸ்பூன் மாவை மட்டும் தனியாக எடுத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதி மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தண்ணீரை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பச்சரிசி மாவை பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகள் ஒரு கப் அளவிற்கு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதல் பால் மட்டும் ஒரு கப் அளவிற்கு எடுத்தால் போதும். பிறகு ஒரு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகள் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

முழுவதுமாக சேர்த்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மீண்டும் கொதி வர அடுத்த பாதியை சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்ப்பதால் ஒன்றுடன் ஒன்று உருண்டைகள் ஒட்டிக் கொள்ளாமல் தனித்தனியாக பிரிந்து வெந்து வரும். எட்டிலிருந்து பத்து நிமிடம் நன்கு வேக வைத்தால் கொழுக்கட்டை உருண்டைகள் ரொம்ப சாஃப்ட்டாக அழகாக வெந்து வந்திருக்கும். கொழுக்கட்டை வேகும் பொழுது இடை இடையே அடுப்பை கூட்டி, குறைத்து கரண்டியின் பின்பாகத்தை வைத்து உடைந்து விடாமல் கிண்டி விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

8 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் கரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இது திக்காக செய்ய வேண்டியது ஆகும். அதன் பின்பு நன்கு கொதித்த பின் வெல்லப்பாகு கரைசலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு நன்கு கொதித்த பின்பு ஏலக்காய் தூள் மற்றும் சுக்கு தூள் சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். 2 நிமிடம் நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பாதி அளவிற்கு ஆறிய பின்பு அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். சூடாக சேர்க்க கூடாது. பின்னர் நன்கு கலந்து சுட சுட பரிமாறினால் பாரம்பரிய முறையில் பால் கொழுக்கட்டை தயார்!

- Advertisement -