4 வகையான பருப்புகள் சேர்த்த அருமையான பருப்பு அடை சுலபமாக சுவையாக செய்வது எப்படி?

paruppu-adai
- Advertisement -

எப்போதும் போல தினமும் காலையில் இட்லி தோசையை சாப்பிடாமல், அதையெல்லாம் கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி பருப்பு வகைகள் சேர்த்து அடை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விஷயமாக இருக்கும். அதேசமயம் வித்தியாசமான உணவை சாப்பிட்ட திருப்தியும் நமக்கு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் அடை செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி – 1 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், உளுத்தம்பருப்பு – 1/2 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், துவரம்பருப்பு – 1/4 கப் இந்த எல்லா பொருட்களையும் போட்டு நான்கு முறை தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இதோடு 6 வர மிளகாயை காம்பு எடுக்காமல் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஊறிய அரிசி பருப்பை தண்ணீரை வடித்து விட்டு, வர மிளகாய்களை எடுத்து காம்பை மட்டும் நீக்கிக் கொள்ளுங்கள். இப்போது ஊறி இருக்கும் அரிசி பருப்பு, மிளகாயையும் மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீராக அரைக்கக்கூடாது. மொழுமொழுவென அரைத்து விட்டால் அடை சுவையாக இருக்காது.

அரைத்த மாவை மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, துருவிய கேரட் – 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, கருவேப்பிலை கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கியது சிறிதளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.

- Advertisement -

இப்போது நமக்கு அடை தட்டுவதற்கு மாவு தயாராக உள்ளது. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து விட்டு, அதில் லேசாக எண்ணெய் தடவி விட்டு ஒரு குழி கரண்டி அளவு மாவை அந்த தோசைக்கல்லில் வார்த்து, உங்களுடைய கையை வைத்து அதை லேசாக தட்டி விட மீண்டும். கையை தண்ணீரில் நனைத்து அல்லது எண்ணெயை தொட்டுக்கொண்டு இப்படி அடை தட்டி ஒரு மூடி போட்டு சில நிமிடங்கள் இதை அப்படியே வேகவிடுங்கள்.

மிதமான தீயில் அடை வெந்து வந்தால்தான் பருப்புகள் சரியான பக்குவத்தில் வெந்து சிவந்து நமக்கு கிடைக்கும். அடுப்பை வேகமாக வைக்கக்கூடாது. அடை கருகிவிடும். ஒரு பக்கம் சிவந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைத்து சுட சுட அடையை தேங்காய் சட்னி, புதினா சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

பின் குறிப்பு: இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேவைப்பட்டால் வெங்காயம், கேரட், இந்த மசாலாப் பொருட்களை சேர்ப்பதற்கு முன்பாகவே கொஞ்சம் மாவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த மாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவு கெட்டுப் போகாது. வெங்காயமும் மற்ற மசாலா பொருட்களும் சேர்க்காமல் அரைத்த உடனேயே, அடை மாவை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -