பாயசங்கள் பல இருந்தாலும் அவற்றில் பாசிப்பருப்பு பாயசம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குழந்தைகளால் விரும்பி சாப்பிடக்கூடிய பாயசம். இந்த பாயசத்தை இந்த பக்குவத்தின் படி செய்தால், வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவர். பாயசம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட ருசித்து சாப்பிடுவர். இப்பொழுது இந்த பாயசத்தை எப்படி செய்வது என்றும், அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்றும் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/4 கிலோ, பாசிப்பருப்பு – 1/4 கிலோ, வெல்லம் – 1/2 கிலோ, நெய் – 100 கிராம், தேங்காய் – 1, முந்திரி திராட்சை ஏலக்காய் – தேவைக்கேற்ப, உப்பு – சிறிதளவு, பச்சைக் கற்பூரம் – சிறிதளவு, தண்ணீர் – 1/2 லிட்டர்.
செய்முறை
முதலில் கெட்டியாக தேங்காய் பால் எடுக்க வேண்டும். அதற்கு தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்றாக மை போல் அரைத்து எடுக்க வேண்டும். பின் ஒரு சுத்தமான துணியில் தேங்காய் கலவையை வடிகட்டி தேங்காய் சக்கையை நீக்கி விட வேண்டும். இப்பொழுது சுத்தமான கெட்டியான தேங்காய்ப்பால் தயாராக இருக்கிறது. தேங்காய் பால் பிடிக்காதவர்கள் பசும்பாலை உபயோகப்படுத்தலாம்.
பாசிப்பருப்பை வாணலியில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, வாசனை வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வறுத்த பாசிப்பருப்பையும், பச்சரிசியையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து, அது கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு அதை ஒரு வடிகட்டியின் உதவியோடு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை அதில் ஊற்ற வேண்டும். ஊற்றிய பிறகு ஒரு நிமிடம் கழித்து தேங்காய் பாலை அதில் ஊற்ற வேண்டும். இந்த கலவை நன்றாக கொதி வந்தவுடன், இறக்கி வைத்து விட்டு, அதில் ஏலக்காய் பொடி, உப்பு, பச்சை கற்பூரம் இவற்றை போட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: இனிமே குண்டு குண்டா, மொறுமொறுன்னு இந்த மைசூர் போண்டா சாப்பிட ஹோட்டலுக்கு போகவே வேணாம். நம்ம வீட்டிலேயே சட்டுனு செஞ்சிடலாம். இந்த டிப்ஸ் தெரிஞ்சா.
பச்சைக் கற்பூரமும், உப்பும் ஒரு சிட்டிகை அளவே போட வேண்டும். இறுதியாக திராட்சை மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து அந்த நெய் உடன் இந்த கலவையில் சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி தயார். தங்கள் குடும்பத்துடன் ருசித்து மகிழுங்கள்.