சருமம் பளபளக்க பீர்க்கங்காய் கடலைப்பருப்பு கூட்டு 10 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது? நீர் சத்து காயில் இவ்வளவு நன்மைகளா?

peerkangai-kootu1_tamil
- Advertisement -

தகிக்கும் வெயிலில் நீர் சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதை ஈடு செய்யும் வகையில் இது துணையாக இருக்கும். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்துள்ள பீர்க்கங்காயில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன. குறிப்பாக சருமத்தை பளபளக்க செய்வதில் இதன் பங்கு அதிகம். மேலும் எடை இழப்பு, ரத்த சோகை ரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த பீர்க்கங்காயில் கடலைப்பருப்பு சேர்த்து 10 நிமிடத்தில் கூட்டு எப்படி சுவையாக வைப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் 2, கடலைப்பருப்பு 100 கிராம், பெரிய வெங்காயம் 2, தக்காளி இரண்டு, குழம்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, துருவிய தேங்காய் அரை கப். தாளிக்க: சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து பூண்டு பல் 5 வரமிளகாய் 2.

- Advertisement -

செய்முறை

பீர்க்கங்காய் கூட்டு செய்வதற்கு இரண்டு பீர்க்கங்காய் எடுத்து அதன் மேல் தோலை சீவி சுத்தம் செய்து குட்டி குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 100 கிராம் கடலை பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு குக்கரை எடுத்து அதில் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து, அதில் இருக்கும் தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் சேர்த்தால் கூட்டு கெட்டியாக வராது. பின் அதனுடன் தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், கொஞ்சம் போல உப்பு போட்டு குக்கரை மூடி நான்கில் இருந்து ஐந்து விசில் விட்டு எடுங்கள். கடலை பருப்பு நன்கு வெந்து வரணும்.

- Advertisement -

பின்னர் மூடியை திறந்து நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து இதனுடன் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காயையும் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வேக விடுங்கள். நீர் காய் என்பதால் சீக்கிரம் வெந்து வரும். அதற்குள் தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சப்பாத்திக்கு சுவையான தக்காளி‌ தொக்கு பெர்ஃபெக்டா இப்படித்தான் செய்யணும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தோலுடன் பூண்டை நசுக்கி அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்து, இரண்டு வர மிளகாயை கிள்ளி சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இதை கூட்டுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கினால் சுடச்சுட சூப்பரான பீர்க்கங்காய் கூட்டு ரெடி! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணுங்க எல்லா வகையான சாதத்துக்கும் சூப்பரா இருக்கும்.

- Advertisement -