பித்ரு தோஷம் நீங்க பைரவர் வழிபாடு

bhairavar
- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அந்த பித்ரு தோஷத்தை நீக்குவதற்காக பல பரிகாரங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி பரிகாரங்களை செய்வதை காட்டிலும் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். அதேபோல் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முயற்சி செய்யும் அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்பட்டு கொண்டு இருந்தால் அவர்களுடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் பித்ரு தோஷத்தை நீக்குவதற்கு பைரவரை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாக திகழக்கூடியவர் தான் பைரவர். இவர் காலங்களை நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்பதால் தான் இவரை காலபைரவர் என்று கூறுகிறோம். காலபைரவரை நாம் முழுமனதோடு வழிபடும் பொழுது நமக்கு ஏற்பட்டிருக்கும் எப்பேற்பட்ட தோஷங்களாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நிவர்த்தியாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்துமே நீங்கும். இப்படிப்பட்ட பைரவரை பித்ரு தோஷம் நீங்க எப்படி வழிபடுவது என்று பார்ப்போம்.

- Advertisement -

பித்ருக்கள் என்றாலே நம்முடைய முன்னோர்கள் என்று அர்த்தம். நம்முடைய முன்னோர்களை நாம் வழிபட வேண்டும் என்றால் அதற்குரிய நாளாக அமாவாசை நாள் திகழ்கிறது. மிகவும் முக்கியமான அமாவாசை தினங்களில் பலரும் அவர்களின் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வார்கள். மேலும் வீட்டில் விரதம் இருந்து காக்கைக்கு அன்னமிட்டு பிறகு உண்ணும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

அப்படிப்பட்ட அமாவாசை தினத்தன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதி முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதற்கு மேல் மஞ்சள் கலந்த பச்சரிசி அதாவது அச்சதையை போட்டு பரப்ப வேண்டும். பிறகு சிறிய அளவில் இருக்கக்கூடிய ஒரு வெள்ளை பூசணிக்காயை எடுத்து இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துவிட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அந்த பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒன்று ஐந்து என்ற எண்ணிக்கையில் திரி போட்டு தீபம் ஏற்றலாம். இந்த பூசணிக்காய் தீபத்திற்கு மலர்களை கொண்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் கால பைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபட நமக்கு இருக்கக்கூடிய பித்ரு தோஷம் என்பது முற்றிலும் நீங்கிவிடும்.

மேலும் நம்முடைய பிற்கால சங்கதிகளுக்கும் இந்த பித்ரு தோஷம் தொடராமல் நம்மால் காக்க முடியும். இந்த பூசணிக்காய் தீபத்தை பித்ரு தோஷம் நீங்குவதற்காக மட்டுமல்லாமல் அகால மரணம், விபத்துக்கள் நேராமல் இருப்பதற்கும் நமக்கு உதவி புரியும்.

இதையும் படிக்கலாமே: மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

முழு நம்பிக்கையுடன் காலபைரவரை சரணாகதி அடைந்து அவருக்கு இப்படி தீபம் ஏற்று வழிபட காலபைரவரின் அருளால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கி நம் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -