10 நிமிடத்தில் மணக்க மணக்க சுவையான பூண்டு சட்னி செஞ்சி கொடுத்தா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தவே பத்தாது!

poondu-chutney
- Advertisement -

பூண்டு அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சளி, கபம் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் உதவும். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்க கூடிய இந்த பூண்டை கொண்டு செய்யப்படும் இந்த சட்னி ரொம்பவே சுவையானதாகவும் இருக்க போகிறது. ஈஸியான பூண்டு சட்னி நொடியில் எப்படி அரைப்பது? என்பதை இனி பார்ப்போம்.

பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன், வர மிளகாய் – 2, பூண்டு பல் – 20, சின்ன வெங்காயம் – 10, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, கடுகு – கால் ஸ்பூன்.

- Advertisement -

பூண்டு சட்னி செய்முறை விளக்கம்:
மணக்க மணக்க பூண்டு சட்னி இப்படி செஞ்சா யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்? பொதுவாக பூண்டு சட்னி எல்லாருக்கும் பிடிப்பதில்லை ஆனால் இப்படி பூண்டு சட்னி ஒருமுறை அரைச்சி பாருங்க பிடிக்காதவர்களும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். முதலில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். சமையல் எண்ணெயை விட நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது. எண்ணெய் காய்ந்ததும் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாயை காம்பு நீக்காமல் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

காம்பு நீக்கினால் விதைகள் வெளியில் வந்து விடும். மிளகாயை தனியாக வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதே எண்ணெயில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பூண்டு சுருள வதங்கி வரும் பொழுது சின்ன வெங்காயத்தை தோலுரித்து அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

- Advertisement -

வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது நீங்கள் ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 5 நிமிடம் ஊறிய பிறகு ஊறிய இந்த புளியையும் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் இந்த பொருட்கள் அத்தனையையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு சிறு தாளிப்பு ஒன்றை கொடுக்க வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வையுங்கள். அதில் மீதமிருக்கும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். நன்கு எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி விட வேண்டும்.

இதனால் எண்ணெய் தெளிந்து பச்சை வாசம் அனைத்தும் போய்விடும். பின்னர் சட்னி கெட்டியாக வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். இதை சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, அடை, ஊத்தாப்பம் போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்? நீங்களும் இதே மாதிரி செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -