அட பூண்டு சட்னியை இப்படி கூட அரைக்கலாமா? இந்த சட்னி ரெசிபி வித்தியாசமா இருக்கே! ஒருமுறை இந்த சட்னி அரைத்து விட்டால் மீண்டும் மீண்டும் இதே சட்னி தான் வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் அடம்பிடிப்பாங்க.

pottu-kadalai-chutney1
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட எத்தனை சைடிஷ் இருந்தாலும், நமக்கு பத்தாது. புதுசு புதுசா ஏதாவது சைட் டிஷ் தேவை என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் இட்லி தோசையைத்தான் மாத்தப் போவது கிடையாது. சைட் டிஷையாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிடுவோமே. அந்த வரிசையில் தேங்காய் சேர்க்காமல், பூண்டு, பொட்டு கடலையை வைத்து மிக மிக ருசியாக ஆரோக்கியம் தரும் சட்டினி எப்படி அரைப்பது? கூடவே ருசிக்கும் குறைவு இருக்காதுங்க. மிஸ் பண்ணாம இட்லி தோசைக்கு ஒருமுறை இப்படியும் சட்னியை அரைத்து பாருங்கள்.

செய்முறை 

இதற்கு முதலில் நமக்கு 1 கப் அளவு பூண்டு தேவை. தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 1 கப் பூண்டு என்றால், உங்களுடைய விருப்பம் தான். சின்ன டீ குடிக்கும் டம்ளரில் கூட அந்த பூண்டை அளந்து கொள்ளலாம். ஏனென்றால் அந்தப் பூண்டில் சரி பாதி அளவு பொட்டுக்கடலையை நாம் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (தோலுரித்த பூண்டு 1 கப், 1/2 கப் பொட்டுக்கடலை இதுதான் அளவு.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன், நல்லெண்ணெய் ஊற்றி அதில் தோலுரித்த பூண்டு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, பூண்டின் தோல் லேசாக சுருங்கி நிறம் மாறி வந்ததும், அடுப்பை அணைத்து கடாயில் இருக்கும் பூண்டை மட்டும் எடுத்து, தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வையுங்கள். இப்போது கடாயில் மீதம் இருக்கும் அதே எண்ணெயில் 1/2 கப் பொட்டுக்கடலையை போட்டு, அந்த பொட்டுக்கடலை லேசாக நிறம் மாறி வரும் வரை சிவக்க விட்டு அதையும் எடுத்துக்கணும்.

பிறகு அதே கடாயில் தேவைப்பட்டால் இன்னும் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஜீரகம் 1/2 ஸ்பூன், வர மல்லி 1 ஸ்பூன், வரமிளகாய் 5, சின்ன கோலி குண்டு அளவு புளி, போட்டு வாசம் வரும் வரை வறுத்து, இதையும் ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது வறுத்த இந்த மசாலா பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, அரைக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். இதில் பூண்டுடன் நாம் பொட்டுக்கடலை சேர்த்து இருப்பதால் சட்னி அரைக்கும்போது கொஞ்சம் திக்காகும். ரொம்பவும் மொழு மொழுன்னு சட்னியை அரைச்சிடாதீங்க.

ரொம்பவும் கொரகொரன்னு சட்னியை அரைக்காதீங்க. சின்ன ரவை பதத்தில் இந்த சட்னி கொஞ்சம் கொரகொரப்பு தன்மையோடு இருக்க வேண்டும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னியை திக்காகவும் பரிமாறலாம். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து நீர்க்கவும் பரிமாறலாம். அது உங்கள் ருசியை பொறுத்தது. (இந்த சட்னிக்கு கொஞ்சம் கூடுதல் காரம் தேவை. அப்போதுதான் பூண்டின் இனிப்பு சுவை தெரியாமல் இருக்கும்.)

இதையும் படிக்கலாமே: தெளிவான கண் பார்வை பெற உதவும் கொத்தமல்லியை இப்படி எளிமையான முறையில் துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்தத்தின் சர்க்கரை அளவையும் குறைக்க உதவும்.

இந்த சட்னிக்கு 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவாப்பிலை, வரமிளகாய், பெருங்காயம், தாளித்துக் கொட்டி கலந்து பரிமாற வேண்டும். அவ்வளவுதான். சுட சுட இட்லிக்கு மேலே கொஞ்சம் நீர்க்க இந்த சட்னியை கரைத்து வார்த்து சாப்பிட்டால் சூப்பரான ருசி இருக்கும். மிஸ் பண்ணாம இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -