சுவையான காரசாரமான பூண்டு தொக்கு 15 நிமிடத்தில் இப்படி செஞ்சா இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக்க அடிச்சிக்கவே முடியாதே!

poondu-thokku0_tamil
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள சூப்பரான சுவையுள்ள ஒரு பூண்டு தொக்கு இப்படி மட்டும் செஞ்சு பாருங்க இனி அடிக்கடி உங்க வீட்டில் செய்ய ஆரம்பித்து விடுவீங்க. பூண்டு ரொம்பவே ஆரோக்கியம் மிகுந்தது ஆகும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யக்கூடியது. இதில் சேர்க்கப்படும் பொருட்களும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. அத்தகைய இந்த டேஸ்டியான பூண்டு தொக்கு ரெசிபி காரசாரமாக எளிதாக எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு – 200 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, வரமிளகாய் – 10, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன். தாளிக்க: சமையல் எண்ணெய் – ரெண்டு டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

பூண்டு தொக்கு செய்முறை விளக்கம்:
முதலில் பூண்டு தொக்கு செய்வதற்கு 200 கிராம் அளவிற்கு பூண்டை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை உரலில் இட்டு நன்கு ஒன்றுக்கு இரண்டாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து அதில் பத்து வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப காம்பு நீக்கி சேர்த்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய எலுமிச்சை அளவிற்கு புளியை ஊற தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தூள் அல்லது பெருங்காய கட்டி உங்களிடம் இருப்பதை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரை நிமிடம் வதக்கிய பின்பு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து அரை நிமிடம் வதக்குங்கள். வெந்தயம் தீய்ந்து போய் விடக்கூடாது எனவே கவனமாக பார்த்து வதக்குங்கள். பின்னர் நீங்கள் ஒன்றுக்கு இரண்டாக இடித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எண்ணெய் அதிகம் தேவைப்பட்டாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பத்து நிமிடம் நன்கு சிவக்க வறுத்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். பின் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள் அதில் நீங்கள் ஆற வைத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதத்துக்கு கொஞ்சம் லீவு விடுங்க. புதுசா இந்த வெண்டைக்காய் சாதத்தை லஞ்சுக்கு கட்டி கொடுங்க. வெண்டைக்காயே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சாதத்தை சாப்பிடுவார்கள்.

பின்னர் நீங்கள் ஊற வைத்த புளியையும் அதனுடன் சேருங்கள். வர மிளகாய்களையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, சுவைக்கு கொஞ்சம் பொடித்த வெல்லம் போட்டு மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து நீங்கள் அரைத்த இந்த விழுதையும் சேர்த்து மூடி போட்டு நன்கு கெட்டியாக திரண்டு வர கொதிக்க வையுங்கள். கொதித்து கெட்டியானதும் நிறம் மாற ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சுட சுட இட்லி, தோசை சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே பரிமாறி பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -