தோசை, சப்பாத்தி, பூரிக்கு காய்கறி, உருளைக்கிழங்கு இல்லாமல் ‘வெங்காய மசாலா’ 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

poori-onion-masala1
- Advertisement -

சப்பாத்தி, பூரி என்றாலே அதற்கு உருளைக்கிழங்கு மசாலா தான் சரியான காம்பினேஷனனாக இருக்கும். ஆனால் சிலருக்கு உருளைக்கிழங்கு வாய்வு என்பதால் அதனை தவிர்த்து விடுவது உண்டு. உருளைக்கிழங்கு மசாலாவை போலவே சுவை தரும் இந்த வெங்காய மசாலாவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு ரொம்ப ரொம்ப சுவையான சைட் டிஷ் ஆக இருக்கும் இந்த வெங்காய மசாலாவை நீங்களும் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

onion

வெங்காய மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒன்றரை டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – மூன்று, நசுக்கிய இஞ்சி, பூண்டு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பெரிய தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

வெங்காய மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

onion-rice1

பருப்பு வகைகள் பொன்னிறமாக வதங்கியதும் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு சோம்பு சேர்த்து வதக்குங்கள். சோம்பு கருக விடாமல் அதற்குள் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இது வெங்காய மசாலா என்பதால் வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. வெங்காயம் லேசாக வதங்கியதும் அதில் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், இடித்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போனதும் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பொடி பொடியாக வெட்டி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிய வதங்கியதும் அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். எந்த அளவிற்கு வெங்காயம், தக்காளி வெந்து கொதித்து வருகிறதோ அந்த அளவிற்கு மசாலா ருசியாக இருக்கும். அதற்குள் 1 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கடலை மாவுக்கு பதிலாக பொட்டுக்கடலை மாவையும் இது போல் கரைத்து சேர்க்கலாம். மசாலாவுடன் அதனை சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

poori-onion-masala

கடலை மாவின் பச்சை வாசம் போனதும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா போலவே வைத்து பரிமாற வேண்டியது தான். பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு மசாலா போல இருந்தாலும், இது வெறும் வெங்காயம் தக்காளியை வைத்து செய்யக்கூடியது தான். உருளைக்கிழங்கை தவிர்ப்பவர்கள் இது போல செய்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப சுலபமான அருமையான சுவையில் இருக்கும் இந்த வெங்காய மசாலாவை நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடுங்கள்.

- Advertisement -