இப்போதைய குழந்தைகள் எல்லாம் எந்த வேலை சொன்னாலும் சரி படிக்க சொன்னாலும் சரி எதற்கெடுத்தாலும் டயர்டாக இருக்கிறது என்ற வார்த்தையை மட்டும் தவறாமல் கூறி விடுகிறார்கள். இதற்கு சோம்பேறித்தனம் ஒரு காரணமாக இருக்கலாம், இருந்தாலும் அவர்களுக்கு நல்ல சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. அதை விட கிடைப்பதற்கான வாய்ப்புகள் இப்போதெல்லாம் மிக மிக குறைவு என்றே கூறலாம். முன்பெல்லாம் தானியங்கள் அதிக அளவில் சமைத்து சாப்பிட்டு வந்தோம் வெளி உணவுகள் கிடையாது. ஆனால் இன்று அப்படியெல்லாம் எதுவும் கிடையாது பெரும்பாலும் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான ஆகாரங்களை கொடுத்தாலே அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள் அந்த வகையில் இந்த புரோட்டின் தோசை குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு.
புரோட்டின் என்றாலே சத்து என்று தான் அர்த்தம். அதாவது சத்துக்கள் அதிகம் நிறைந்த பயிறு வகைகளை கொண்டு செய்யப்படும் இந்த தோசை அதனால் தான் இதற்கு பெயர் புரோட்டின் தோசை. இன்றைய கால சூழ்நிலையில் நாம் ஒவ்வொரு பயிராக ஒவ்வொரு நாள் சமைத்து அப்படியெல்லாம் சாப்பிட யாருக்கும் நேரம் இருப்பதில்லை எனவே இது போன்ற முறைகளில் நாம் செய்து சாப்பிடும் போது ஒன்றுக்கு மேற்ப்பட்ட தானிய பலன்கள் நமக்கு ஒரே நேரத்தில் கிடைப்பது உடன் இது இட்லி தோசை மாவு போல் அரைத்து புளிக்க வைத்து இதை செய்ய வேண்டியது இல்லை அரைத்ததும் உடனே ஊற்றி சாப்பிடும் போது சத்துக்கள் நமக்கு வீணாகாமல் முழுவதுமாக உடம்பு கிடைக்கும். அப்படி ஒரு சுவையான புரோட்டின் தோசை எப்படி செய்வது என்பது பற்றிய குறிப்பு தான் இந்த பதிவு.
தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை – 1 கப், பச்சை பயிறு – 1 கப், கருப்பு உளுந்து – 1 கப், காரா மணி -1 கப் காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 10, கருவேப்பிலை கொத்தமல்லி – கைப்பிடி அளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
இந்த பருப்புகளை எல்லாம் எடுத்து நன்றாக கழுவி முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலை ஒரு முறை அலசிய பிறகு நீரை வடித்து விட்டு இவையெல்லாம் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நல்ல ஒரு அடை மாவு பதத்திற்கு (சற்று கொரகொரப்பாக )அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பை பற்ற வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரிந்ததும், அதில் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்கிய பிறகு அடை மாவில் சேர்த்து கொத்தமல்லியும் அதில் தூவிய பிறகு பத்து நிமிடம் கழித்து தோசை கல்லை வைத்து சூடானதும் அடை ஊற்ற தொடங்கி விடலாம். அவளவு தான் சுவையான அதே சமயம் நல்ல சத்து உள்ள புரோட்டின் தோசை தயார்.
இதையும் படிக்கலாமே: மலபார் ஸ்டைல் சூப்பரான அரிசி மாவு பூரி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். நாம செய்ற பூரியை விட இந்த பூரி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி இப்படி எதை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். சைடிஷ் இல்லாமல் கூட இதை அப்படியே சாப்பிடலாம். மேலும் இத்துடன் எதாவது காய்கறிகளையும் சேர்த்து செய்து தரலாம். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற சத்தான உணவு வகைகள் செய்து தாருங்கள்.