உருளைக்கிழங்கு கறி ஈசியாக காரசாரமாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, எல்லா சாதத்துக்கும் தொட்டுக்க அட்டகாசமாக இருக்குமே!

potato-kari-fry_tamil
- Advertisement -

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. இந்த உருளைக்கிழங்கை வைத்து கருவேப்பிலை, மிளகு, சீரகத்தை எல்லாம் சேர்த்து காரசாரமான சுவையான ஒரு உருளைக்கிழங்கு கறியை எப்படி எளிதாக செய்வது? ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்திக்கு கூட சைட் டிஷ் ஆக இதை வைத்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு டேஸ்டியாக இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு கறி ரெசிபி செய்முறை விளக்கத்தை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு கறி செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 300 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு – பத்து பல், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

உருளைக்கிழங்கு கறி செய்முறை விளக்கம்
உருளைக்கிழங்கு கறி செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு உருளைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். தோலை சீவி விட்டு சதுர சதுரமாக க்யூப் போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டி வைத்துள்ள உருளைக் கிழங்குகளை ஈரப்பதம் இல்லாமல் ஒரு காட்டன் துணியில் போட்டு துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கு கியூபுகளை போட்டு நன்கு கோல்டன் கலரில் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பொறிக்காமலும் நீங்கள் செய்ய விரும்பினால் செய்யலாம். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கருவேப்பிலையையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பவுடர் போல அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் உருளைக்கிழங்கு பொரித்த எண்ணெயில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மட்டும் எண்ணெய் இருக்குமாறு மீதம் இருக்கும் எண்ணெயை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் பெரிய வெங்காயம் ஒன்றை தோலுரித்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பூண்டு பற்களையும் தோல் உரித்து சேர்த்து வதக்குங்கள். நன்கு இவை பொன்னிறமாக வதங்கி வந்த பின்பு நீங்கள் பொரித்து வைத்த உருளைக் கிழங்குகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெஜ் கோலா உருண்டையை இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் கூட, இனி இந்த வெஜ் கோலா உருண்டைக்கு அடிமை தான்.

பின்னர் இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு ஒருமுறை பிரட்டி விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்த பவுடரையும் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். ஏற்கனவே பொரித்த உருளைக்கிழங்கு என்பதால் மசாலா வாசம் போக வதக்கினால் போதும். தேவைப்பட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள், அடிப்பிடிக்காமல் இருக்கும். அவ்வளவுதாங்க சுடச்சுட இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு சாப்பிட்டு பாருங்க இன்னும் வேண்டும் என்று கேட்க தோன்றும்.

- Advertisement -