பத்து நிமிடத்தில், பட்டென செய்யக்கூடிய புடலங்காய் வறுவல் ரெசிபி இதோ உங்களுக்காக.

pudalangai-varuval
- Advertisement -

புடலங்காய், இது ஒரு நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. ஆனால், இதை கூட்டு செய்து கொடுத்தாலோ பொறியலாக செய்து கொடுத்தாலும் அல்லது வேறு எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மிக மிக எளிமையான முறையில் இப்படி வறுவல் செய்து கொடுத்துப் பாருங்களேன். சுடச்சுட சாதத்தில் குழம்பு தேவையில்லை என்று இந்த வறுவலையே போட்டு பிசைந்து பிசைந்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு ருசி இருக்கும். அது மட்டுமில்லாமல் ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் இதற்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும். லெமன் சாதத்தில் கூட தொட்டு சாப்பிட்டால் நல்ல ருசி தரும். வாங்க அந்த ரெசிபி எப்படி செய்யறதுன்னு பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் ஒரு மீடியம் சைஸ் அளவு புடலங்காயை எடுத்து லேசாக மேலே இருக்கும் தோலை சீவி விட்டு புடலங்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புடலங்காய் ரொம்பவும் தடிமனாக இருக்க வேண்டாம். ரொம்பவும் மெலிசாக இருக்க வேண்டாம். கொஞ்சம் நீள நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன், எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, தாளித்து பருப்பு லேசாக சிவந்து வந்ததும் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கைப்பிடி அளவு சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டு வந்த பிறகு, நறுக்கி வைத்திருக்கும் புடலங்காய்களை இதில் போட்டு எண்ணெயிலேயே வதக்குங்கள்.

இதற்கு எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் தான் சுவையாக இருக்கும். புடலங்காய் எண்ணெயிலேயே வதங்கி வேகும்போது வறுவலின் ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். காய்க்கு தேவையான அளவு உப்பு தூள் தூவி வதக்கி விட்டுக் கொண்டே இருங்கள். புடலங்காய் அரை பாகம் வதங்கி எண்ணெயில் வெந்தவுடன் மிகக் குறைந்த அளவு 1 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை இதன் மேலே தெளித்து மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் புடலங்காய் 80 சதவிகிதம் வெந்து வந்துவிடும். புடலங்காய் டிரை ஆகத்தான் இருக்க வேண்டும். புடலங்காய் 80 லிருந்து 85 சதவிகிதம் வெந்து வந்தவுடன் ட்ரையாகி இருக்கும்போது மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூனுக்கும் கொஞ்சம் குறைவாக சேர்த்து எல்லா பொருட்களையும் காயோடு கலந்து விட்டு அப்படியே மசாலா பொருட்களின் பச்சை வாடை போகும்படி சிவக்க வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எல்லோரும் குப்பையில் தூக்கிப் போடும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படி ஒரு கில்லாடி ஐடியாவா? நம்ம மூளைக்கு இத்தனை நாளா இது எட்டாமல் போச்சே!

நாம் சேர்த்திருக்கும் மசாலா பொருட்களின் பச்சை வாடை ஒரு நிமிடத்தில் நீங்கிவிடும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டே நன்றாக வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த புடலங்காய் வறுவல் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். புடலங்காய் ரொம்பவும் வெந்து குழைந்து போகக்கூடாது. அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்து கடித்து சாப்பிட்டால் கொஞ்சம் வெடுக்கு வெடுக்கு என்ற பக்குவத்தில் இருந்தால் தான் இதன் சுவை நன்றாக இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -