10 ரூபாய்க்கு பாக்கெட் புளியோதரை வாங்குவதை விட வீட்டிலேயே இப்படி செய்து வைத்தால், கோவில் புளியோதரை டேஸ்ட் கூட தோற்றுப் போய்விடுமே!

puliyodharai-powder-podi_Tamil
- Advertisement -

கோவில் புளியோதரை சுவையில் புளியோதரை கிண்டுவதற்கு நம் வீட்டில் தான் தயார் செய்ய வேண்டும். என்னதான் கடைகளில் விற்கப்படும் பொடியை வாங்கி சமைத்தாலும், புளியோதரையின் சுவை என்னவோ அவ்வளவு நன்றாக இருப்பது கிடையாது. அற்புதமான சுவையில் ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே புளியோதரை பொடி எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு கப், உளுத்தம் பருப்பு – முக்கால் கப், தனியா விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, வெள்ளை எள்ளு – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, புளி – ஒரு ஆரஞ்சு பழம் அளவு, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

புளியோதரை பொடி தயாரிக்க தேவையான எல்லா பொருட்களையும் முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் அல்லது அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். வாணலி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு கப் அளவிற்கு கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். வறுக்கிறேன் என்கிற பெயரில் கருக விட்டு விடாதீர்கள்.

பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க இதே போல வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டே வாருங்கள். பின்னர் தனியா விதைகள், மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை இலைகளை பிரஷ் ஆக சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கருப்பு எள்ளு சேர்த்தால் புளியோதரை பொடி ரொம்ப கருப்பாக மாறிவிடும், எனவே வெள்ளை எள்ளு சேர்த்து லேசாக ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் கொஞ்சம் போல ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 வர மிளகாய்களை காம்பூ நீக்கி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் கொஞ்சம் போல தேவைப்பட்டால் கூடுதலாக எண்ணெய் விட்டு ஒரு ஆரஞ்சு பழம் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து அதில் விதைகள், நார் எல்லாம் நீக்கி துண்டு துண்டாக சேர்த்து எண்ணெயிலேயே வறுத்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இனி சட்னி செஞ்சா இப்படித் தான் செய்யணும் சொல்ற மாதிரி சூப்பரா சட்னி ரெசிபி. ஒரு வெங்காயம் தக்காளி இருந்தா அத வச்சு ரொம்பவே டேஸ்டியான ஒரு ஹெல்தியான சட்னியை ரெடி பண்ணலாம்.

மிளகாயுடன், புளியையும் சேர்த்து முதலில் நன்கு ஆற விட்டுவிட்டு மிக்ஸியை இயக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு அரை பட்டவுடன் மீதம் இருக்கும் எல்லா பொருட்களையும் சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு போட்டு மீண்டும் நைசாக அரைக்க வேண்டும். அவ்வளவுதான் மணக்க மணக்க புளியோதரை பொடி கோவில் புளியோதரை டேஸ்டில் இப்பொழுது தயார்! இதை எப்பொழுதும் போல தாளித்து, இந்த பொடியை சேர்த்து சாதத்துடன் கிளறினால் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு கப் சாதத்திற்கு ஒரு டேபிள் ஸ்பூன் இந்த பொடி போட்டால் போதும்.

- Advertisement -