பெருமாளுக்குரிய மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதத்தின் கடைசி நாளுக்கு நாம் வந்து விட்டோம். இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்யாதவர்கள் கூட புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் வழிபாடு செய்யும் பொழுது விரைவில் பெருமானின் அருளால் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி கடைசி நாள் வழிபாடு
காக்கும் கடவுளாக திகழக்கூடிய பெருமாளை நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிப்பாட்டிற்கு பலன் அதிகம் என்றே கூறலாம். ஏனென்றால் பெருமாளை வழிபாடு செய்யும் பொழுது பெருமாளின் அருளோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும். மேலும் நம்முடைய வேண்டுதலும் விரைவில் நிறைவேறும்.
அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் ஏகாதசியும் சேர்ந்து வருகிறது. இந்த அற்புதமான நாளில் பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது திருமாலின் அருளால் நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும். இந்த வழிபாட்டை காலை 6 மணியிருந்து 8 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள் செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒரு வெள்ளை நிற துணியில் மஞ்சளை தடவி மஞ்சள் துணியாக எடுத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 11 நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த 11 நாணயங்களும் ஒரே நாணயமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எந்த நாணயமாகவே இருந்தாலும் பரவாயில்லை எண்ணிக்கை 11 இருக்க வேண்டும். மேற்சொன்ன அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து பெருமானின் படத்திற்கு முன்பாக மூன்று நெய் தீபங்களை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு பெருமாளிடம் உங்களுடைய பிரார்த்தனை எது நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை முன் வைத்து மஞ்சள் நிற துணியில் எடுத்து வைத்திருக்கும் அந்த 11 நாணயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக “ஓம் நமோ நாராயணா” என்று கூறிக் கொண்டே வைக்க வேண்டும். பிறகு மூட்டையாக கட்டி பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள். எப்பொழுது உங்களுடைய பிரார்த்தனை நிறைவு பெறுகிறதோ அப்பொழுது பெருமாள் ஆலயத்திற்கு சென்று இதை உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி ரமா ஏகாதசி கதை
புரட்டாசி மாத கடைசி நாள் அன்று இந்த முறையில் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளோடு மகாலட்சுமி அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.