புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய முக்கியமான நாளாக கருதப்படுகிறது. பலரும் அன்றைய நாளில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து பெருமாளுக்கு படையல் இட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். பலரும் அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றாலும் நவராத்திரியோடு சேர்ந்து வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்குரிய நாட்களில் வரக்கூடிய சனிக்கிழமை என்பதால் இந்த சனிக்கிழமையில் நாம் பெருமாளை வழிபாடு செய்யும் பொழுது பெருமாளின் அருளோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அதன் மூலம் நம்முடைய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். அன்றைய நாளில் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய வழிப்பாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.
தீராத பணப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களும், எவ்வளவு நல்லது செய்தாலும் வெளியில் கெட்ட பெயராக தான் வருகிறது என்று புலம்புபவர்களும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வை திருமால் தருவார். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்து கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பெருமாளுக்கு துளசி தீர்த்தத்தை வைத்து தீபமேற்றி வழிபாடு செய்து அந்த துளசி தீர்த்தத்தையே பருக்கி விரதம் இருக்க வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாட்டை செய்து முடித்துவிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வழிபாட்டை மட்டும் செய்ய வேண்டும் என்று விரும்புவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலையில் 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள் செய்யலாம் அல்லது காலை 10:45 மணியிலிருந்து 11 45 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5 30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் செய்யலாம். பெருமாளுக்கு வாசனை மிகுந்த மலர்கள், மஞ்சள் நிற மலர்கள், துளசி மாலை போன்றவற்றை அணிவித்து அவருக்கு முன்பாக ஒரு தட்டில் மஞ்சளை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கும் பட்சத்தில் அந்த வலம்புரி சங்கை மஞ்சள் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து மஞ்சளுக்கு மேல் வைக்க வேண்டும். வலம்புரி சங்கு இல்லாத பட்சத்தில் மஞ்சளை மட்டுமே அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
பெருமாளுக்கு முன்பாக மூன்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். பெருமாளுக்கு நெய்வேத்தியமாக தங்களால் இயன்ற ஏதாவது ஒரு கலவை சாதம், இனிப்பு பொருட்கள் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். கண்டிப்பான முறையில் துளசி தீர்த்தத்தை வைக்க வேண்டும். பிறகு வாசனை மிகுந்த மலர்கள் மற்றும் துளசி இலைகளால் பெருமாளுக்கு உரிய மந்திரமான “ஓம் சீனிவாசாய நமோ நம, ஓம் கோவிந்தாய நமோ நம” என்னும் மந்திரத்தை 54 முறை கூறி அர்ச்சனை செய்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு வலம்புரி சங்கை எப்பொழுதும் இருக்கக்கூடிய இடத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். துளசி தீர்த்தத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பருக கொடுத்துவிட்டு வலம்புரி சங்கிற்கு கீழ் வைத்த மஞ்சள் தூளை சிறிதளவு துளசி தீர்த்தத்தில் சேர்த்து நன்றாக கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். மீதமிருக்கக்கூடிய மஞ்சளை நாம் எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர புரட்டாசி மாதம் செய்ய வேண்டிய பரிகாரம்
பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உரிய சனிக்கிழமையில் இப்படி பெருமாளுக்குரிய மஞ்சளை பயன்படுத்தி நாம் வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் முற்றிலும் தீரும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.