சுவையான புதினா சட்னி ஹோட்டல் ஸ்டைலையே மிஞ்சும் அளவுக்கு எளிமையாக இப்படி கூட செய்யலாமே! அனைவரும் விரும்பும் புதினா சட்னி.

puthina-chutney
- Advertisement -

வித்தியாசமான சட்னி வகைகளில் இந்த புதினா சட்னியும் ஒன்று. புதினா சட்னியை வெவ்வேறு விதமாக செய்யப்படுவது உண்டு. இது போல வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து மசாலாக்கள் போட்டு செய்து பாருங்கள், ரொம்பவே ருசியாக இருக்கும். அனைத்து விதமான டிபன் வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த சுவையான புதினா சட்னி எளிமையாக எப்படி வீட்டில் அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா – கால் ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – ஐந்து, எண்ணெய் – 3 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, புதினா – ஒரு கட்டு, துருவிய தேங்காய் – அரை கப், தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் மீடியம் சைஸ் அளவில் ஒரு கட்டு புதினா எடுத்து நன்கு சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளுங்கள். ஆய்ந்த இலைகளை ஓரிரு முறை நன்கு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காரத்திற்கு வரமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அனைத்தையும் ஒன்று போல சீராக லேசாக வாசம் வர வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்கு வறுபட்டதும் சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து அதனுடன் வதக்கலாம்.

- Advertisement -

சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம் பிரச்சனை இல்லை. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி இரண்டும் மசிய சீக்கிரம் வதங்கி வர அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கி விடுங்கள். தக்காளி மசிந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை சேர்க்க வேண்டும். இரண்டு கைப்பிடி அளவிற்கு இருந்தால் சரியாக இருக்கும்.

பின்னர் இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நாரெல்லாம் நீக்கி சேர்த்து புதினா இலைகள் சுருள வதக்கி விடுங்கள். புதினா இலைகள் சுருண்டதும் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி விடுங்கள். ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள். பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த சுவையான புதினா சட்னிக்கு சிறு தாளிப்பு ஒன்று கொடுக்கலாம். தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்து சேர்த்தால் சூப்பராக இருக்கும். எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் சரியான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த புதினா சட்னியை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -