மதிய வேளையில் இந்த மிளகாய் கிள்ளி சாம்பாருடன் சுடச்சுட சாதம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். எப்பொழுதையும் விட ஒரு பிடி சாதம் அதிகமாக சாப்பிடுவீர்கள்

sambar
- Advertisement -

புதிதாக சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட உடனே தெரிந்து கொள்ளும் ஒரு குழம்பு வகை என்றால் பருப்பு சாம்பார் தான். சாம்பாரை பல வகைகளில் செய்ய முடியும். ஒவ்வொரு விதமான சாம்பார் வைக்கும் பொழுதும் ஒவ்வொரு சுவை இருக்கும். வெங்காய சாம்பார், மிளகாய் கிள்ளி சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், மாங்காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார் என பல விதங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய சாம்பார் என்றால் அது மிளகாய் கிள்ளி சாம்பார் தான். இந்த சாம்பார் காய் சேர்த்து செய்யும் சாம்பாரை விட சற்று தண்ணீர் பதத்தில் இருக்கும். ஆனால் இதனை சுடசுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஒரு துவையல் மட்டும் இருந்தால் போதும். நாவில் எச்சில் ஊறும் சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த மிளகாய் கிள்ளி சாம்பார் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 10, கடுகு – ஒரு ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 5 பல், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஐந்து பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். அதன் பிறகு காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளி, இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்ய வேண்டும்.

அதன்பிறகு 2 தக்காளியை நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். பிறகு குக்கரில் பருப்பை சேர்த்து, தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். நன்றாக சூடானதும் அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு சீரகம், வெந்தயம் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு கறிவேப்பிலை மற்றும் தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

புளிக்கரைசல் நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பிறகு, வேக வைத்த பருப்பை கடைந்து இதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -