சனி பகவான் ஏன் ஊனமாக பிறந்தார்? சனி திசை நடப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் இது தான் தெரியுமா?

sani-astro
- Advertisement -

சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர் சனி பகவானாவார். சனி பகவான் நீதி வழங்குவதில் தர்மவானாக இருப்பதால் பலரும் அவரைக் கண்டாலே அச்சப்படுவார்கள். ஜாதகம் பொய், ஜோதிடம் பொய் என்று கூறுபவர்கள் கூட சனி பெயர்ச்சி நடக்கும் பொழுது பலன்களை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வார்கள். அந்த அளவிற்கு சனி பகவான் மக்களை வெகுவாக கவர்ந்தவராக இருக்கிறார். சனி பகவான் ஊனமாக பிறந்ததற்கு என்ன காரணம்? சனி திசை நடப்பவர்கள் மறக்காமல் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்கிற தகவல்களை நாமும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

நவ கிரகங்களில் மிக முக்கியமாக திகழ்பவர் சனி பகவான். தவறு செய்பவர்களுக்கு தகுந்த சமயத்தில், தகுந்த தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டும் பொறுப்பிலிருக்கும் இந்த சனி பகவான் பிறக்கும் பொழுது சற்று ஊனமாக பிறந்துவிட்டார். மற்ற எல்லா கிரகங்களை விடவும் பூமியை சுற்றி வருவதற்கு சனி பகவானுக்கு அதிக காலம் எடுக்கும். ஒருமுறை பூமியைச் சுற்ற 30 வருடங்கள் ஆகும்.

- Advertisement -

சனி பகவான் சூரிய பகவானை போல வலிமை வாய்ந்தவராகவும், பிரகாசமாகவும் இல்லாமல் இருண்டு காணப்படுவதால் சூரிய பகவானுக்கு சனி பகவான் மீது பிரியம் இல்லாமல் போய்விட்டது. பாசத்திற்காக ஏங்கிய சனி பகவான் ஒரு கட்டத்தில் தந்தை மீது வெறுப்பு கொள்கிறார். இதனால் சிவபெருமானை நோக்கி தவமிருந்து தந்தையை விட தான் வலிமையானவனாக மாற வேண்டும் என்று வரம் அடைகிறார். எவருக்கும் கிடைக்காத ஈஸ்வர பட்டம் சனி பகவான் பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து சிவபெருமானிடமிருந்து அடைந்த பொழுது அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

நவகிரகங்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு, தவறு செய்பவர்களை தண்டிக்கும் பொறுப்பை ஏற்று இன்று நவகிரகத்தில் முதன்மையான நாயகனாக விளங்கும் சனி பகவான் வயிற்றில் இருக்கும் பொழுது அன்னை சாயாதேவிக்கு தீவிர பக்தியின் காரணமாக உடல் வலிமை குறைந்தது. சாயாதேவி சிவபெருமான் மீது கொண்ட அசையாத பக்தியின் காரணமாக தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்து முழு மூச்சாக தவமிருந்து கொண்டிருந்தார். இதனால் ஆரோக்கியம் குறைந்து சனி பகவான் பலவீனமாகவும், ஒரு கால் ஊனமுற்றும் பிறந்துவிட்டார். சாயாதேவி என்பவர் நிழல் உருவம் ஆனவர்.

- Advertisement -

சூரிய பகவானின் மனைவியாகிய உஷா தேவி சிவபெருமானை நோக்கி தவம் இருக்க விருப்பம் கொண்டார். எனினும் சூரிய பகவானை பிரிய மனமில்லாமல் தன்னைப் போலவே ஒரு நிழல் உருவத்தை உருவாக்கி தான் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு பின்னர் தவமிருக்க சென்றார். உஷா தேவியின் இந்த நிழல் உருவம் தான் சாயாதேவி. சாயாதேவி நிழல் உருவமாக இருந்து சனிபகவானை பெற்றெடுத்ததால் அவர் நிழல் போல கறுத்து காணப்படுகிறார். தன்னை போல தன் மகன் இல்லை என்ற கவலையால் சனி பகவானை வெறுக்கிறார் சூரிய பகவான்.

தந்தை செய்த இந்த நீதியற்ற செயலுக்கு பழி வாங்குவதற்காகவே உறுதிபூண்டு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இத்தகைய அரும்பெரும் வரங்களை வாங்கிய சனி பகவான் நாம் செய்யும் தவறுகளையும் உடனுக்குடன் தண்டித்து நம்மை திருத்துவதற்கு முயல்கிறார். இவரைப் பார்த்து தவறு செய்பவர்கள் தான் பயப்பட வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல. தூய மனதுடன், நேர்மையான குணத்துடன் இருப்பவர்களை சனி பகவான் மிகவும் விரும்புகிறார். சனி பகவான் சற்று ஊனம் ஆனவர் என்பதால் சனி திசை நடப்பவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை செய்வதன் மூலம், அவர்கள் வாழ்க்கைக்கு நல்வழியை காண்பிப்பதன் மூலம் அவரது அருளை எளிமையாக பெற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement -