இல்லத்தரசிகளுக்கு தேவையான 10 அட்டகாசமான சமையல் குறிப்புகள்! இது தெரிஞ்சா இனி உங்களை கையிலேயே பிடிக்க முடியாதே!

kitchen-tips
- Advertisement -

சமையல் செய்யும் இல்லத்தரசிகளுக்கு தேவையான அட்டகாசமான 10 குறிப்புகள் இந்த பதிவின் மூலம் காணலாம். சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு முதல் சமைத்து முடித்த பின்பு வரை குட்டி குட்டியான விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால் ரொம்பவே உபயோகமாக இருக்கும். அந்த வகையில் நாம் இந்த பயனுள்ள சமையல் குறிப்பு பத்தினை தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு நன்மைகளை தரும் என்று தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:
குக்கர் கைப்பிடி லூசாக இருந்தால் அதன் ஸ்க்ரூவை கழட்டிவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பூ கட்டுகின்ற நூல் அல்லது துணி தைக்கும் நூல் ஏதாவது மெல்லிய நூல்கள் இருந்தால் ஸ்குருவை சுற்றி மெல்லியதாக கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஸ்குருவை டைட்டாக மாட்டி விடுங்கள். அவ்வளவுதான், இனி உங்களுடைய குக்கர் கைப்பிடி அசையவே அசையாது அப்படியே கிரிப்பாக பிடித்துக் கொள்ளும்.

- Advertisement -

குறிப்பு 2:
சப்பாத்திக்கு மாவை சப்பாத்தி கட்டையில் தேய்க்கும் பொழுது கட்டையுடன் மாவு ஒட்டிக் கொண்டால் சிரமமாக இருக்கும். இந்த சமயத்தில் உருட்டு கட்டையையும், சப்பாத்தி கட்டையையும் சேர்த்து ஃப்ரீசரில் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வைத்து எடுங்கள். அதன் பிறகு சப்பாத்தி தட்டி பாருங்கள், கொஞ்சம் கூட ஒட்டாது. சப்பாத்திக்கு மாவையும், பூரிக்கு எண்ணெயையும் தொட்டு தேய்ப்பது நல்லது.

குறிப்பு 3:
கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவற்றை சாப்பர் இல்லாமல் ரொம்பவும் பொடியாக நறுக்க முடியாது. இந்த சமயத்தில் எப்பொழுதும் போல பெரிது பெரிதாக துண்டுகள் போட்டு மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரே ஒரு சுற்று சுற்றி எடுத்து பாருங்கள். சாப்பரில் வெட்டியது போலவே பொடி பொடியாக உங்களுக்கு காய்கறிகள் கிடைத்து விடும். சமைப்பதற்கு நேரமும் மிச்சமாகும்.

- Advertisement -

குறிப்பு 4:
வீட்டில் வாழைப்பழம் சீப்பு சீப்பாக வாங்கி வைப்பவர்கள் அதை ஒரு ஈரத் துணியில் கட்டி வையுங்கள். இதனால் வாழைப்பழம் சீக்கிரம் கருகாது, அழுகியும் போகாது. துணி அதிக ஈரத்துடனும் இருக்கக் கூடாது. காய்ந்து போகவும் கூடாது. அவ்வப் பொழுது தண்ணீரை ஸ்ப்ரே செய்து ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். ஒரு வாரம் வரை தாராளமாக ஃபிரஷ்ஷான வாழைப்பழங்களை சாப்பிடலாம்.

குறிப்பு 5:
நிறைய பூண்டு உரிக்க வேண்டுமா? பூண்டை பற்களாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெறும் கடாயில் போட்டு இரண்டு நிமிடம் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு ஆறியதும் ஒரு காட்டன் கைகுட்டியில் பூண்டு பற்களை போட்டு டைட்டாக முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சொரசொரப்பான தரையில் வைத்து லேசாக தேய்த்தால் போதும், பூண்டு தோல் அத்தனையும் உரிந்து வந்திருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
மிளகுத்தூள் கடையில் வாங்கினால் ரொம்பவும் நைசாக இருக்கும். ஆனால் வீட்டில் தயாரித்தால் அவ்வளவு நைசாக கிடைப்பது கிடையாது. இதற்கு முதலில் தேவையான மிளகை வெறும் வாணலியில் போட்டு ஐந்து நிமிடம் லேசாக வறுத்துக் கொள்ளுங்கள் பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து பாருங்கள், கடையில் கிடைப்பது போலவே அரைபடும்.

குறிப்பு 7:
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக சிலர் வெல்லத்தை தான் டீ, காபிக்கு போட்டு சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஆரோக்கியமும் ஆகும். எனவே கட்டி வெல்லத்தை ஒரு கேரட் துருவலில் போட்டு நன்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால், ஸ்பூன் போட்டு எடுத்து பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.

குறிப்பு 8:
நீண்ட நேரம் சமையலறையில் சமையல் செய்பவர்கள் வெறும் தரையில் நிற்காமல் இரண்டு மூன்று மேட்களை போட்டு அதன் மேல் நின்று சமைத்தால் பாதம் வலி குறையும்.

குறிப்பு 9:
சௌசௌ, பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர் சத்துள்ள காய்கறிகளை ஐந்து நிமிடத்திற்கு மேல் வேக வைக்கக் கூடாது. இதற்கு குட்டி குட்டியாக நறுக்கி மூடி வைத்து சமைத்து பாருங்கள் ஐந்தே நிமிடத்தில் வெந்துவிடும்.

இதையும் படிக்கலாமே:
மைசூர் ஸ்டைலில் மஷ்ரூம் பிரியாணியை ஒருமுறை இப்படி காரசாரமா செஞ்சு பாருங்க, மத்த பிரியாணி எதுவும் இது கிட்ட நிக்க கூட முடியாது. அந்தளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

குறிப்பு 10:
இரும்பு பாத்திரங்களில் சமைப்பது நல்லது என்றாலும் அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களை அதில் சமைப்பது கெடுதலை உண்டாக்கும். எலுமிச்சையில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை இரும்புடன் சேர்ந்தால் கசப்பு தட்டி விடும். தக்காளி உணவுகளை கூட இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாது.

- Advertisement -