ஆரோக்கியம் நிறைந்த சிறுதானிய அவல் இனிப்பு இட்லி செய்முறை

siruthania aval idly
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு காரணம் அவர்கள் சிறுதானியங்களை அதிக அளவில் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டதும், வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பாலிஷ் போட்ட அரிசிகளை சேர்க்காமல் இருந்ததும் தான் காரணம். இவை அனைத்தும் இன்றைய அறிவியல் ரீதியாக உண்மை என்று உணர்த்தப்பட்ட செய்திகளே. அதனால்தான் பலரும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒரு சிறுதானியத்தையாவது தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சிறு தானிய அவலை வைத்து செய்யக்கூடிய இட்லியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பாலிஷ் போட்ட அரிசிகளில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதனால் தான் பட்டை தீட்டாத அதாவது பாலிஷ் போடாத அரிசியை பயன்படுத்த வேண்டும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. அதையும் விட மிகவும் சிறப்புக்கிரியது என்னவென்றால் அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை உபயோகப்படுத்துவது என்றும் கூறப்படுகிறது. சிறு தானியங்களை பல வகைகளில் நாம் செய்தாலும் இட்லியாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கோதுமை அவல் – 1 கப்
  • கேழ்வரகு அவல் – 1 கப்
  • திணை அவல் – 1 கப்
  • கம்பு அவல் – 1 கப்
  • சாமை அவல் – 1 கப்
  • குதிரைவாலி அவல் – 1 கப்
  • சோளம் அவல் – 1 கப்
  • வரகு அவல் – 1 கப்
  • உலர் திராட்சை – 20
  • பேரிச்சம்பழம் –  3
  • பாதாம் – 8
  • முந்திரி – 8
  • தேங்காய் பால் – 1 கப்
  • ஏலக்காய் – 2
  • அத்திப்பழம் – 2
  • நாட்டு சர்க்கரை – 1 கப்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் மேல் சொன்ன அவல் வகைகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உலர் திராட்சை, பேரிச்சம் பழம், அத்தி பழம் இவை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம் மற்றும் முந்திரி பருப்பை இடித்து பொடியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஏலக்காய் சேர்த்து தேங்காய் பால் எடுத்து அதையும் அதில் ஊற்றி, நாட்டு சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு தண்ணீர் கொதிக்கும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். நாம் ஊற வைத்த அவல் மாவாக இருக்காது என்பதால் நம்மால் கரண்டியில் எடுத்து இட்லி தட்டில் ஊற்ற முடியாது.

- Advertisement -

அதற்கு பதிலாக ஏதாவது ஒரு அச்சை பயன்படுத்தி அதில் அமுக்கி தலைகீழாக இட்லி சட்டியில் வைத்து தட்ட வேண்டும். இதற்கு ஒரு சிறிய கிண்ணம் அல்லது ஒரு கரண்டியை கூட உபயோகப்படுத்தி அதில் இந்த அவளை எடுத்து வைத்து நன்றாக அமுக்கி பிறகு இட்லி தட்டில் நாம் தலைகீழாக கவுத்தும்பொழுது அது அப்படியே வந்து இட்லி தட்டில் விழுந்து விடும். பிறகு இதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். மிகவும் சுவையான ஆரோக்கியமான சிறுதானிய அவல் இனிப்பு இட்லி தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: ஆந்திரா ஸ்டைல் எள்ளு சட்னி செய்முறை

ஒவ்வொரு சிறுதானியத்தையும் நாம் தனித்தனியாக பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த முறையில் அனைத்து சிறுதானியங்களையும் நாம் சேர்த்து இட்லி செய்யும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் அதிகரிக்க கூடிய பொருட்கள் என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

- Advertisement -