தக்காளி சேர்க்காமல் இப்படி ஒரு முறை நாவின் நரம்புகளை சுண்டி இழுக்கும் வெங்காய சட்னியை செய்து பாருங்கள்! 10 இட்லி கொடுத்தாலும் பத்தவே பத்தாது.

big-onion-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் அனைவருக்கும் பிடித்த வெங்காய சட்னியை இப்படி கூட செய்யலாம். வெங்காய சட்னி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வெங்காயத்துடன் அந்த காரசாரமான மிளகாயின் சுவை நாவின் நரம்புகளை சுண்டி இழுக்கும். தக்காளி எதுவும் சேர்க்காமல் இந்த வெங்காய சட்னியை இட்லி, தோசை மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட கெட்டியாக பிசைந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு ருசியை கொடுக்கக் கூடிய இந்த வெங்காய சட்னியை எப்படி செய்வது? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

onion

வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 12, வெந்தயம் – கால் டீஸ்பூன், தனியா விதை – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பூண்டு பல் – 5, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லி – சிறிதளவு.

- Advertisement -

வெங்காய சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சை அளவிற்கு புளியை உருட்டி எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் இல்லை என்றால் சாதாரண எண்ணெய் ஊற்றி கொள்ளலாம். அதில் 12 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து குறைந்த தீயில் வைத்து 3 நிமிடம் லேசாக வறுத்து எடுக்கவும்.

spicy-onion-chutney2

இவை ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம் மற்றும் தனியா விதைகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். கொஞ்சம் வாசம் வந்த பின்பு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பின்பு புளியை கரைத்து அந்த தண்ணீரை அதில் வடிகட்டி ஊற்ற வேண்டும்.

- Advertisement -

இவை நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின் கொதித்து வரும் சமயத்தில் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் தண்ணீர் வற்றி சுண்ட, சுருள வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

onion-thokku

கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கி வந்ததும், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து எண்ணெய் மேலே தெளியும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாற வேண்டியது தான். சுட சுட இட்லி, தோசை, சாதத்துடன் தொட்டுக் கொள்ள அற்புதமாக இருக்கும், இந்த வெங்காய சட்னி ரொம்பவே அட்டகாசமான சுவையில் இருக்கப் போகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் இதே முறையில் செய்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -