இதைத் தெரிந்து கொண்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிற்றே என்று. அந்த அளவிற்கு இதன் சுவையும், மணமும் மிகவும் சூப்பராக இருக்கும்

radish
- Advertisement -

காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் ஒரு காய்கறிகளை சமைப்பது என்பது கிடையாது. காய்கறிகளை நறுக்கி அதனை செய்வதற்கு நேரம் அதிகமாக செலவாகும் என்பதால் அப்பளம், வத்தல், முட்டை போன்றவற்றை தான் பதார்த்தமாக செய்து கொள்கிறார்கள். அதிலும் வார இறுதி நாட்களிலும் சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை மட்டுமே உண்கிறார்கள். இவ்வாறு முழுவதுமாக காய்கறிகளை ஒதுக்கி வைத்து விடுகின்றனர். அதில் ஒரு சிலர் சில காய்கறிகளை சமைத்தாலும் முள்ளங்கி, பாகற்காய் போன்ற உணவுகளை எப்பொழுதும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் இவ்வாறு தவிக்கின்ற உணவுகளையும் மிகவும் எளிமையான முறையில் நேரம் குறைவாகவும், சுவையாகவும் சமைத்துக் கொடுக்க முடியும். அப்படி செய்யக் கூடிய முள்ளங்கி வறுவலை எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vegetables

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – 200 கிராம், சோள மாவு – 2 ஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், தயிர் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் முள்ளங்கியை தோல் சீவி, நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை தண்ணீரில் அலசி, ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்க வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

முள்ளங்கி

பின்னர் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், அரை ஸ்பூன் மிளகு தூள் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த கலவை அனைத்தும் முள்ளங்கியில் ஒன்று சேரும்படி நன்றாக கைகளை வைத்து கலந்துவிட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றை 15 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இந்த முள்ளங்கி மசாலாவை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.

radish1

பின்னர் இந்த முள்ளங்கி வறுவலுடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். அல்லது சாதத்துடன் பதார்த்தமாகவும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். நீங்களும் ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -