சுண்டக்காய் துவையல் செய்முறை

sundakkai thuvaiyal
- Advertisement -

காய்கறிகளில் மிகவும் சிறியதாக இருக்கக்கூடிய காய்தான் சுண்டைக்காய். இந்த சுண்டைக்காயில் பல மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றன. ஆனால் இதை யாரும் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதற்கு காரணம் பாகற்காயைப் போல இதிலும் சிறிதளவு கசப்பு இருப்பது தான். இருப்பினும் இதனால் நம் உடலுக்கு பல அற்புதமான நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் இந்த சுண்டைக்காயை வைத்து துவையல் செய்யும் முறை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சுண்டைக்காயில் அதிக அளவு புரதம், இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்கிறது. உடலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும் அற்புத ஆற்றலை கொண்டதாக திகழ்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களையும் சிவப்பணுக்களையும் அதிகரிக்க உதவுகிறது. பார்வைத் திறனும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சுண்டைக்காய் – 400 கிராம்
  • வெங்காயம் – 1
  • நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 15
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • கடுகு – 1 ஸ்பூன்
  • உளுந்து – 1 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். சுண்டைக்காயை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு இடி கல்லில் போட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இடித்து வைத்திருக்கும் சுண்டைக்காயை அதில் போட்டு குறைந்தது ஏழு நிமிடமாவது வதக்க வேண்டும். பிறகு இதை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் நெய் ஊற்றி நெய் காய்ந்ததும் கடலைப்பருப்பை போட்டு சிவக்க வறுக்க வேண்டும். பிறகு இதில் காய்ந்த மிளகாய் 10, ஒரு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு வறுத்து வைத்திருக்கும் சுண்டைக்காய், சீரகம், உப்பு, புளி போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

சுண்டைக்காய் ஏற்கனவே வதங்கி இருக்கும் என்பதால் ரொம்ப நேரம் வதங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு இதை ஆற வைக்க வேண்டும். ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்த இந்த துவையலை ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மீதம் இருக்கும் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் இவற்றை போட்டு தாளித்து துவையலில் ஊற்றி விட வேண்டும். மிகவும் சுவையான சுண்டைக்காய் துவையல் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கருவேப்பிலை பூண்டு குழம்பு செய்முறை

இந்த துவையலை சாதத்தில் போட்டு பிணைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -