ஒரு முறை சுவைத்து விட்டால் போதும். மீண்டும் இதனை எப்போது செய்வீர்கள் என்று அனைவரும் கேட்டுக்கொண்டே இருக்கும் சுவையில் மிகவும் அற்புதமான புடலங்காய் கூட்டு

pudalngai-kootu
- Advertisement -

இப்போது வெயில் காலம் என்பதால் அதிகப்படியான நீர்ச்சத்து உடலுக்கு தேவைப்படுகிறது. எனவே முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவு வகைகளும் நீர் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி நீர்ச் சத்து நிறைந்த காய்கறி புடலங்காய்9 வெள்ளரிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற பல காய்கறிகள் இருக்கின்றன. இவற்றை பொரியல் செய்தும் சாப்பிடலாம். அல்லது இவற்றுடன் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதாக இருந்தால் கூட்டு செய்வது தான் சிறந்த முறையாகும். இதில் காரமும் குறைவாக சேர்ப்பதால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இப்படி ஒரு சுவையான புடலங்காய் கூட்டை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – கால் கிலோ, பாசிப் பருப்பு – 50 கிராம், கடலை பருப்பு – 25 கிராம், துவரம் பருப்பு – 25 கிராம், சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, பூண்டு – பத்து பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – ஒன்றரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 4, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் புடலங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு இவை மூன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிக் கொண்டு, அதன் பின்னர் இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள பருப்புடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பூண்டு மற்றும் 3 பச்சை மிளகாயை கீறி சேர்க்க வேண்டும். பிறகு இதனை அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பருப்பு பாதி அளவு வெந்ததும் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் புடலங்காய் சேர்த்து கலந்து விட வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் 2 சில்லு தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புடலங்காய் நன்றாக வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, புடலங்காயுடன் சேர்க்க வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -