இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பருப்பு சேர்க்காமல் இப்படி சுவையான தக்காளி சாம்பார் ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். ஐந்து இட்லி சாப்பிடுபவர்கள் கூட இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள்

tomato-sambar-idly
- Advertisement -

இட்லி, தோசை உணவு என்றாலே அதனுடன் தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு சட்னி கண்டிப்பாக இருக்கும். அனைவரும் தங்கள் வீட்டில் இட்லியுடன் சட்னி சேர்த்து சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். ஏனென்றால் சட்னி செய்வது மற்ற சைடிஷ்களை விட சற்று சுலபமான விஷயம் தான். ஆனால் இவற்றையும் விட குறைந்த நேரத்தில் சட்டென செய்யக்கூடிய இந்த தக்காளி சாம்பாரை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். பிறகு மீண்டும் அடிக்கடி இதனை சமைத்துக் கொடுப்பீர்கள். இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது வயிறு நிறைந்தாலும் இதன் சுவையில் மீண்டும் இட்லி, தோசையை சுவைத்துக் கொண்டே இருப்பீர்கள். வாருங்கள் இதனை எப்படி சுலபமாக செய்ய முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – 5, பெரிய வெங்காயம் – 1, பூண்டு 7 பல், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், இட்லி மாவு – ஒரு ஸ்பூன், தாளிப்பு வடகம் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயையும், பூண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் மூன்று அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து, 8 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து, ஒரு மத்து வைத்து இந்த கலவையை நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் இட்லி மாவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இந்த குழம்புடன் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு அடுப்பின் மீது வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் மற்றொரு அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் தாளிப்பு வடகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இதனை சாம்பாருடன் சேர்த்து ஒருமுறை கலந்து விட்டால் போதும் சுவையான தக்காளி சாம்பார் தயாராகிவிடும்.

- Advertisement -