டீ போடும் நேரத்தில் சட்டுனு 10 நிமிஷத்தில் எதையும் ஊற வைத்து அரைக்காமல் அரிசி மாவு வடை மொறுமொறுவென்று எப்படி தயாரிப்பது?

arisi-rice-vadai
- Advertisement -

எதையும் ஊற வைத்து அரைக்காமல் ரொம்பவே சுலபமாக சட்டென்று பத்து நிமிடத்தில் வடை மாவு தயாரித்து சூப்பரான மொறுமொறு வடை எப்படி வீட்டிலேயே எளிதாக சுடுவது? ஒரு கப் அரிசி மாவு இருந்தால் போதும் குறைந்த நேரத்தில் கடகடவென செஞ்சிடலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுவையான ஒரு கிரிஸ்பியான அரிசி மாவு வடை எப்படி தயாரிக்கலாம்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அரிசி மாவு வடை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சைமிளகாய் – 2, சீரகம் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை – சிறிதளவு, பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, உப்பு – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

அரிசி மாவு வடை செய்முறை விளக்கம்:
அரிசி மாவு வடை செய்வது ரொம்பவே சுலபமாக இருக்கும். வடைக்கு உளுந்து ஊற வைப்பது, அரைப்பது போன்ற எந்த வேலையும் நமக்கு இதில் இல்லை. சட்டென பத்து நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம். முதலில் அதற்கு பெரிய வெங்காயம் இரண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நன்கு சுத்தம் செய்து கழுவி பின்னர் நறுக்கிய மல்லித் தழை மற்றும் கறிவேப்பிலை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் இரண்டு பச்சை மிளகாயை காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். பெருங்காயத் தூள் 2 சிட்டிகை மற்றும் கால் ஸ்பூனிற்கும் குறைவாக மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் நன்கு கைகளால் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் கலந்து விடும் பொழுது வெங்காயத்தையும் உதிர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த அரிசி, வறுக்காத அரிசி, பச்சரிசி, புழுங்கலரிசி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அரிசி மாவு சேர்த்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு இந்த கலவையை நாம் கொண்டு வர வேண்டும். தண்ணீரை அதிகம் சேர்த்து விடக்கூடாது. எடுத்து தட்டினால் வடை போல் தட்ட முடிய வேண்டும். அந்த அளவிற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள்.

பின் கைகளில் எண்ணெய் தடவி கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு உருண்டையாக உருட்டி பின்னர் கைகளால் அழுத்தம் கொடுத்து வடை போல தட்டி கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு வடைகளாக போட்டு இருபுறமும் சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுங்கள். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த அரிசி மாவு வடை நல்ல சுவையாக இருக்கும். மாலை நேரங்களில் டீயுடன் சாப்பிட அவ்வளவு சூப்பராக இருக்கும். கிரிஸ்பியான அரிசி மாவு வடை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி ருசித்து பாருங்க.

- Advertisement -