சுவைகூட்டும் கத்திரிக்காய் சட்னி 10 நிமிடத்தில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இப்படிக்கூட செய்யலாமே!

brinjal-chutney
- Advertisement -

தினமும் ஒரே வகையான சட்னி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கக் கூடிய இந்த கத்திரிக்காய் சட்னி நிச்சயமாக ரொம்பவே பிடிக்கும். விதவிதமான கத்திரிக்காய் வகைகளில் இப்படி ஒருமுறை சட்னி செய்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் உங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு ருசி தரும் இந்த கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அட்டகாசமான சைட் டிஷ் ஆக இருக்கும். சுவையான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது? என்பதை நாமும் கற்றுக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

brinjal1

கத்திரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 200 கிராம், தக்காளி – மூன்று, உருளைக்கிழங்கு – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து -ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – ஒன்று, பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

கத்திரிக்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் கத்திரிக்காயை 200 கிராம் அளவிற்கு எடுத்து காம்பு நீக்கி சுத்தம் செய்து நான்கைந்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இதனை ஒரு குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் மீடியம் சைஸ் தக்காளி 3 எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே நன்கு கழுவி முழுதாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி நான்கைந்து துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓரிரு கத்தரிக்காய்கள் நாக்கு அரிக்கும் என்பதால் உருளைக்கிழங்கு சேர்த்தால் சரியாகி விடும்.

tomato-brinjal-kadayal1

பின்னர் இவற்றுடன் பச்சை மிளகாய் ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து 3 விசில் விட்டு எடுத்தால் நன்கு காய்கறிகள் அனைத்தும் வெந்து வந்திருக்கும். தக்காளியின் தோலை எடுத்து விட்டு இவற்றை இந்த சூடு உடனேயே நன்கு மசிக்கவும். மத்து இருந்தால் மசிக்கலாம் அல்லது கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அப்படியும் உங்களால் மசிக்க முடியாவிட்டால் நன்கு ஆற வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு தாளிப்பு கரண்டியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு நன்கு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்தை நன்கு வதங்கி வரும் வேளையில் கருவேப்பிலை ஒரு கொத்து கழுவி உருவி சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நான்கைந்து வர மிளகாய்களை போட்டு லேசாக வதக்குங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

tomato-brinjal-kadayal2

அதனை இந்த தாளிப்பு கரண்டியில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசனை போக வதங்கி வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள கத்தரிக்காய் கலவை ஊற்ற வேண்டும். இவை லேசாக கொதித்து வரும் சமயத்தில் பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லித்தழை தூவி இறக்கி இட்லி, தோசைக்கு சுடச்சுட பரிமாற வேண்டியது தான். இப்படி ஒரு முறை கத்திரிக்காய் சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள், வித்யாசமான சுவையுடன் அதிக ருசியாக இருப்பதால் 10 இட்லி, 10 தோசை கொடுத்தால் கூட உங்களுக்கு பத்தவே செய்யாது. இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாமே!

- Advertisement -