கமகமக்கும் ஹோட்டல் டிபன் சாம்பார் ரகசியம் என்ன? எல்லா வகையான டிபனுக்கும் செம காம்பினேஷனாக இருக்கும் இந்த காய்கறி போட்ட சாம்பார் இப்படித்தான் செய்யணுமா?

hotel-tiffen-sambar
- Advertisement -

இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்ற அதிரடியான காம்பினேஷனனாக இருக்கும் இந்த காய்கறி சாம்பார் ஹோட்டலின் சுவையை கொடுக்கக் கூடியது ஆகும். பெரிய பெரிய ஹோட்டல் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகளில் கூட சட்டென சுலபமாக செய்து விடக் கூடிய இந்த டிபன் சாம்பார் நாமும் நம் வீட்டில் எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

டிபன் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, கேரட் – ஒன்று, முருங்கைக்காயை – 1, பாசிப்பருப்பு – 100 கிராம், சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், புளி – சிறு எலுமிச்சை அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

டிபன் சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் பாசிப் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களை தயாராக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், முருங்கைக்காய் அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை ஏதேனும் இருந்தால் அதையும் சேர்க்கலாம்.

இவையெல்லாம் நன்கு வெந்த பின்பு நீங்கள் வேக வைத்து எடுத்துள்ள பாசிப் பருப்பை சேர்க்க வேண்டும். நன்கு கலந்து விட்ட பின்பு இப்போது மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்பு தனியா தூள் மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

மசாலா பொருட்களின் பச்சை வாசம் நீங்க, சாம்பார் நன்கு கொதித்து வரும் பொழுது ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து அதில் ஊற்றி கொள்ள வேண்டும். புளி கரைசலுக்கு பதிலாக ஒரு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். பின் அதில் நறுக்கிய மல்லித்தழை தூவி கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

இதற்கு அடுப்பை பற்ற வைத்து தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து சாம்பாரில் கொட்டி இறக்கினால் அவ்வளவு ருசியான கமகமக்கும் டிபன் சாம்பார் தயார்! இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -