உடம்பிற்கு சத்தான இந்த கொண்டைக்கடலை குழம்பை இப்படி அரச்சு வச்சி பாருங்க. இதன் சுவையில் வீடு மணமணக்கும்

kadalai
- Advertisement -

உடம்பிற்கு புரோட்டீன் சத்தும் மிகவும் அவசியமாகிறது. இப்பொழுதெல்லாம் பலரும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளையே விருப்பமாக உண்கின்றனர். ஆனால் உடம்பிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய புரதச்சத்து இருக்கும் கொண்டை கடலை, காராமணி, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். இவற்றை அவித்து சாப்பிட கொடுத்தால் பலரும் விருப்பமாக உண்பதில்லை. ஆனால் மிகவும் சுவையாக குழம்பு வகைகளில் இவற்றை சேர்த்து சமைக்கும் பொழுது அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள். அப்படி கொண்டைக்கடலை சேர்த்து செய்யக்கூடிய சுவையான ஒரு குழம்பு வகையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadalai

தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பூண்டு – 15 பல், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன், தனியாத் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்து, இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி, பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலை இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, குக்கரை மூடி போட்டு மூடி, அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

onion

பிறகு மூன்று வெங்காயத்தை நான்கு துண்டுகளாக அரிந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மூன்று தக்காளியையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு 3 பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். 15 பல் பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, கீறி வைத்துள்ள பச்சை மிளகாயையும், அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

kadalai

பிறகு இவற்றுடன் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு வேக வைத்துள்ள கடலையையும், அதன் தண்ணீரையும் இதனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும். பின்னர் எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, புளிக் கரைசல் எடுத்து, இவற்றுடன் சேர்த்து ஒரு கொதி வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு, இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -