புடலங்காய் கூட்டு 10 நிமிடத்தில் சுலபமாக இப்படி செஞ்சு பாருங்க, ஹோட்டலில் செய்தது போலவே ரொம்ப ருசியாக இருக்கும்.

pudalangai-koottu
- Advertisement -

புடலங்காய் கூட்டு ரொம்பவே அற்புதமான கூட்டாக சமையலில் இருந்து வருகிறது. கல்யாண வீடுகளில், ஹோட்டல்களில் கொடுக்கும் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ருசியான புடலங்காய் கூட்டு இப்படி ஒருமுறை செய்து பாருங்க. காரக்குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற எல்லா குழம்பு வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த புடலங்காய் கூட்டு எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

pudalangai

புடலங்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய புடலங்காய் – ஒரு கப், கடலைப் பருப்பு – அரை கப், பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, அரைக்க: துருவிய தேங்காய் – கால் கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 1 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – 3, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், தாளிக்க: எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 1.

- Advertisement -

புடலங்காய் கூட்டு செய்முறை விளக்கம்:
முதலில் பாசிப் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விடுங்கள். ஊறியதும் அதனை அப்படியே ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சோம்பு மற்றும் சீரகத்தை இடித்து சேர்த்து குக்கரை மூடி அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

koottu3

ரெண்டு விசிலில் நன்கு பூ போல வெந்து வரும். நீங்கள் குக்கரை மூடி வைக்கும் பொழுது கரண்டியால் கிண்டி விடக்கூடாது. பருப்பு அடியில் நன்கு வெந்து வர வேண்டும். மேலே இருக்கும் காய் மேலே வேக வேண்டும். அப்பொழுது தான் சூப்பராக இருக்கும். 2 விசில் வருவதற்குள் அரைக்க தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள், அதனுடன் பச்சை மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம், அரிசி மாவு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் அதிகம் சேர்த்து விட கூடாது, அரைபடும் அளவிற்கு தண்ணீரை கொஞ்சமாக சேர்த்தால் போதும். பின்னர் குக்கர் விசில் விட்டதும் திறந்து அதில் அரைத்த இந்த தேங்காய் விழுதினை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டால் போதும். தேங்காய் சேர்த்த பின் அதற்கு மேல் கொதிக்கக் கூடாது. தண்ணீர் வற்றி கெட்டியான பதத்திற்கு வந்ததும், இப்பொழுது தாளித்துக் கொட்ட வேண்டும். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு தாளிப்பு கரண்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

pudalangai-koottu1

கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரே ஒரு வர மிளகாயை கிள்ளி சேருங்கள். அவ்வளவுதாங்க! ரெண்டு நிமிஷத்தில் நன்கு வதங்கி வந்ததும் புடலங்காய் உடன் சேர்த்து தாளிக்க வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த புடலங்காய் கூட்டு அற்புதமான சுவையில் இருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -