ரோட்டுக்கடை ‘பருப்பு இல்லாத தண்ணி சாம்பார்’ ஒருமுறை இப்படி வச்சு பாருங்க. இதன் சுவை சொல்வதற்கு வார்த்தை இல்லை.

sambar
- Advertisement -

கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, எதுவுமே சேர்க்காமல் வெறும் தக்காளியை வைத்து தண்ணியாக ஒரு சாம்பார் இப்படி வைத்தால் இட்லிக்கு தொட்டுக்கொள்ள, இந்த சாம்பார் சூப்பராக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான முறையில் ரோட்டுகடை ஸ்டைலில் தண்ணி சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tometo-gravy

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய் 6 இலிருந்து 7 சேர்த்து முதலில் வதக்கி கொள்ளவேண்டும். பச்சைமிளகாய் வதங்கியவுடன் பொடியாக வெட்டிய மீடியம் சைஸில் இருக்கும் 7 தக்காளிகளை அந்த குக்கரில் போட்டு, ஒரு முறை கிளறிவிட்டு தக்காளியில் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி போட்டு 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குக்கர் விசில் வந்து பிரஷர் அடங்கியதும், குக்கரில் இருக்கும் தக்காளி பச்சை மிளகாயை மட்டும் தனியாக எடுத்து நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் நமக்கு தக்காளியில் இருந்து வடிந்த தண்ணீர் மீதமிருக்கும். அது அப்படியே இருக்கட்டும். சாம்பார் தாளித்த பின்பு, சாம்பாருடன் ஊற்றி கொள்ளலாம். இப்போது சாம்பார் தாளிக்க செல்வோம்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 20 பல் பொடியாக நறுக்கியது சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பச்சைமிளகாய் விழுதை கடாயில் ஊற்ற வேண்டும். அடுத்தபடியாக குக்கரில் மீதமிருக்கும் தண்ணீரையும் கடாயில் ஊற்றி, சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போட்டு, சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கலந்து சாம்பாரை நன்றாக கொதிக்க வையுங்கள். (இந்த சாம்பார் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.)

tomato-sambar1

சாம்பார் மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை கொதித்தால் போதும். அடுப்பை வேகமாக வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான் இறுதியாக அடுப்பை அணைத்துவிடுங்கள். இதன் மேலே பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி, பரிமாறுங்கள். இதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாக புளிப்பு உப்பு காரம் கொஞ்சம் தூக்கலாக, சுவையில் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -