இந்த பூரி செய்ய எண்ணெய்யே தேவையில்லை! தண்ணீர் இருந்தாலே போதும் 10 நிமிடத்தில் செய்து விடலாம் தெரியுமா?

water-poori

பொதுவாக பூரி சுடுவதற்கு எண்ணெய் தேவை! அதிக எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியம் இல்லாதது என்பதால் பெரும்பாலானோர் பூரியை தவிர்த்து விடுகின்றனர். குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு வகையான டிஷ் தான் ‘பூரி’. அது எப்படி எண்ணெய்யே இல்லாமல் பூரி சுட முடியும்? என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்தப் பூரியை எப்படி எண்ணெய் இல்லாமல் வெறும் தண்ணீரில் வேறு வகையாக ஆரோக்கியம் நிறைந்த சுலபமான டிஷ் ஆக மாற்றி செய்யலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

poori 1

‘இனிப்பு தண்ணீர் பூரி’ செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவிற்கு
தேங்காய் துருவல் – 3/4 கப்

வறுத்த வேர்கடலை தூள் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
பாதாம் – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

poori-maavu

‘இனிப்பு தண்ணீர் பூரி’ செய்முறை விளக்கம்:
பொதுவாக பூரி மாவு செய்யும் முறை எப்படியோ! அதே போல தான் இந்த பூரிக்கும் மாவு பிசைய வேண்டும். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து தண்ணீர் ஊற்றிக் பிசைய வேண்டும். கோதுமை மாவு கைகளில் ஒட்டாமல் நன்கு திரண்டு வரும் வரை உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு பௌலில் நன்கு துருவிய தேங்காய்யை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது இதனுடன் பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சைகளை சேர்த்து கொள்ளவும். பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். முந்திரி, பாதாம் சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக கருப்பு எள் அல்லது வெள்ளை எள் ஏதாவது ஒன்றை பொடித்து சேர்த்துக் கொள்ளலாம். 10 நிமிடம் கழித்து பூரி மாவை வட்ட வடிவத்தில் அழகாக தேய்த்து தட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த பூரி மாவு தேய்க்கும் பொழுது மாவு சேர்க்கக்கூடாது. தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் எண்ணெய் சேர்த்து தேய்த்துக் கொள்ளலாம். எல்லா உருண்டைகளையும் இதே போல் தேய்த்து தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

water-poori2

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பூரி செய்ய எண்ணெய் எப்படி ஊற்றிக் கொள்வோமோ! அதே போல தண்ணீரை பாதி அளவிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பூரிகளாக தண்ணீரில் இட்டு வர வேண்டும். நீங்கள் முதலில் மாவு போடும் பொழுது அடியில் சென்று விடும். மாவு வெந்தபின் மேலே மிதந்து வரும். அதன் பின்னர் திருப்பிப் போட்டுக் கொள்ளலாம். இரண்டு புறமும் வெந்த பின்னர் எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இது போல அனைத்து பூரிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

water-poori1

பின்னர் கலந்து வைத்துள்ள தேங்காய் கலவையை பூரியின் மீது தேவையான அளவிற்கு தூவி அதனுடன் சர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை என்று உங்களிடம் இருக்கும், நீங்கள் விரும்பும் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பூரிகளை ரோல் செய்து கொள்ள வேண்டும். அனைத்து பூரிகளையும் இதேபோல செய்து மேலே வேர்கடலை தூள், அல்லது எள்ளு தூள் அல்லது தேங்காய் துருவல் சேர்த்து கார்னிஷ் செய்து. கொள்ளுங்கள். அவ்ளோ தாங்க! ரொம்ப ரொம்ப சுலபமா பத்து நிமிடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய ஆரோக்கியமான ‘இனிப்பு தண்ணீர் பூரி’ தயார் ஆகிவிடும். எண்ணெய் சேர்த்து பூரி செய்ய முடியாதவர்கள் இதுபோல புதுமையான முறையில் ஆரோக்கியமான பூரி மற்றும் சுவையான பூரி செய்து வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடலாம்.