பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால் அதை பெரும்பாலும் குக்கரில் தான் செய்வார்கள். பாத்திரத்தில் சரியான பக்குவத்தில் செய்ய வராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் சுவையான தேங்காய் பால் சாதத்தை கொஞ்சம் கூட குழையாமல் பாத்திரத்தில் உதிரி உதிரியாக செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம் சுலபமான இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
செய்முறை
இந்த தேங்காய் பால் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை சுத்தமாக கழுவிய பிறகு 15 நிமிடம் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயம், ஒரு பெரிய தக்காளி இரண்டையும் கொஞ்சம் பெரிய அளவிலே நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் மூன்று பச்சை மிளகாயை கீறி மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சாதத்தை தாளித்து விடலாம்.
முதலில் அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் பிரியாணி செய்யும் பாத்திரம் இருந்தால் அதை பயன்படுத்தி செய்து கொள்ளலாம். இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு 1 ஸ்பூன் சீரகம், 1ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சோம்பு, 2 லவங்கம், 1 பட்டை, 2 ஏலக்காய், 1 பிரியாணி இலை இவை அனைத்தையும் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையின் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு அடுப்பை லோ ஃபிலிமில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடுப்பை அதிகமான தீயில் இருந்தால் இவை எல்லாம் வதங்கி நிறம் மாறி விடும் தேங்காய் பால் சாதத்தை பொருத்த வரையில் வெள்ளையாக இருந்தால் தான் பார்க்கவும் நன்றாக இருக்கும் அதன் சுவையும் நன்றாக இருக்கும். இப்போது பொரித்த இந்த மசாலாக்களுடன் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்குங்கள். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் ஒரு நிமிடம் வரை லேசாக வதக்கினால் போதும்.
இப்போது தக்காளி கீறிவைத்த பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்த பின் கொஞ்சமாக புதினா இலையை சேர்த்து வதக்கி விடுங்கள். அதன் பிறகு 1 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் ஊற்றி கொள்ளுங்கள். இதில் 1/2 ஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு நன்றாக கொதிக்க விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: கொத்தமல்லி சட்னியை நிறம் மாறாம ஹோட்டல் ஸ்டைலில் இப்படி அரைச்சி பாருங்க. சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா போதும் எவ்வளவு இட்லி சுட்டாலும் பத்தவே பத்தாது.
தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியை தண்ணீர் முழுவதுமாக வடித்து விட்டு இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு அடுத்த மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வேக வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டு மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்தால் சுவையான தேங்காய் பால் சாதம் அருமையாக தயாராகி விடும்.