கெட்டி தயிர் ரெடியாக வெறும் 1/2 மணி நேரம் போதும். இனி சூப்பர் தயிரை சாப்பிட 8 மணி நேரம் உறை போட்டுவிட்டு காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

curd
- Advertisement -

பொதுவாகவே நமக்கு கெட்டித்தயிர் கிடைக்க வேண்டும் என்றால் இப்போதெல்லாம் கடையில் சென்று பத்து ரூபாய் கொடுத்து தயிர் கப் அல்லது தயிர் பாக்கட்டை வாங்கி கொள்கின்றோம். ஆனால் வீட்டிலேயே பசும்பால் வாங்கி காய்ச்சி அதில் உறை போடக்கூடிய தயிரின் சுவையும் சத்தும் வேறு எந்த தயிரிலும் நிச்சயம் கிடைக்காது. தயிர் உறை போட்டால் 8 மணி நேரத்தில் பால் தோய்ந்து தயிர் ஆக மாறும். ஆனால் வெறும் 1/2 மணி நேரத்தில் பாலை உறைய வைத்து கெட்டி தயிர் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தயிர் உறை போடுவதற்கு நமக்கு காய்ச்சிய பால் தேவை. 1 டம்ளர் அளவு பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தண்ணீர் ஊற்றாமல் திக்காக காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த உடன் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு இந்த பாலை 3 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தயிர் கெட்டியாக கிடைக்கும்.

- Advertisement -

காய்ச்சிய இந்தப் பாலை கை பொறுக்கும் வெதுவெதுப்பான சூட்டில் ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பாலை உறை போட ஒரு சில்வர் பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்திற்கு உள்பக்கத்தில் பாலை ஊற்றுவதற்கு முன்பு முதலில் வாழை இலையை போட்டு விடுங்கள். வாழை இலைக்கு மேலே காய்ச்சிய பாலை ஊற்றி இந்த வெதுவெதுப்பான சூடாக இருக்கும் பாலில் 1 டேபிள் ஸ்பூன் அளவு உறை மோரை ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். இந்த கிண்ணத்திற்கு மேலே ஒரு தட்டை போட்டு மூடி விடுங்கள். இதை எப்படி 1/2 மணி நேரத்தில் தயிராக மாற்ற போகிறோம் பார்க்கலாமா.

அடுப்பில் அகலமான ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து அதில் உள்ளே  தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீருக்கு மேல் உறை போட்டு வைத்திருக்கும் கிண்ணத்தை வைத்து இட்லி பாத்திரத்தின் மேலே தட்டை போட்டு மூடி விடுங்கள். அவ்வளவு தான். அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள். 1/2 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் இருக்கும் கிண்ணத்தை வெளியே எடுத்து ஒரு ஸ்பூன் விட்டு அப்படியே கிளறி பாருங்கள். கெட்டி தயிர் தயாராகி இருக்கும். ஆனால் இதில் புளிப்பு சுவை இருக்காது. புளிக்காத கெட்டித் தயிர் நமக்கு கிடைத்திருக்கும். தேவை என்றால் இதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இந்த தயிரில் கொஞ்சமாக புளித்த தயிரை கலந்து விட்டாலும் புளிப்பு சுவை வந்துவிடும்.

யாராவது இவ்வளவு கஷ்டப்பட்டு உறை போடுவார்களா என்று யோசிக்கவேண்டாம். அவசரத்திற்கு ஒரு பத்து பேருக்கு தயிர் தேவை வீட்டில் ஒருத்தருக்கு மட்டும் தான் புளித்த தயிர் இருக்கிறது எனும் போது இப்படி டக்குனு உறை போட்டு அந்த கொஞ்சமாக இருக்கக்கூடிய புளித்த தயிரை, நீங்கள் தயார் செய்த புளிக்காத இந்த தயிரோடு கலந்து விட்டால் சூப்பர் தயிர் தயாராகி இருக்கும். உடனடியாக கோவிலுக்கு தயிர் சாதம் பிரசாதம் செய்ய வேண்டும். நல்ல தயிர் வீட்டில் இல்லை என்றால் உடனடியாக இப்படி தயார் செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா அவசர சமயத்தில் தேவைப்படும்போது ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -