துவரம் பருப்பில் இத்தனை அருமையான மொறு மொறு தோசை செய்ய முடியுமா? ஒரே மாதிரி தோசை சாப்பிட்டு போர் அடிக்கும் போது கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

thoor-dal-dosa1
- Advertisement -

ஒரே மாதிரி இட்லி மாவில் தோசை வார்த்து சாப்பிட்டால் போர் அடிக்குது. கொஞ்சம் வித்தியாசமான சுவையில் மசாலா வாசத்தோடு தோசை கிடைத்தால் நல்லாத்தான் இருக்கும் என்று நீங்கள் சிந்திப்பவர்களாக இருந்தால், ஒரே ஒரு நாள் இந்த துவரம் பருப்பு தோசையை முயற்சி செய்து பாருங்கள். புரோட்டின் சத்து நிறைந்த இந்த தோசையை குழந்தைகளுக்கு சுட்டுக் கொடுத்தால் மொறுமொறுப்பாக அப்படியே சாப்பிட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு உடலுக்கு தேவையான புரோட்டின் சத்தும் கிடைக்கும். சில குழந்தைகள் சாம்பார் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள் அல்லவா அவர்களுக்கு துவரம் பருப்பை சேர்த்து இப்படியும் தோசை சுட்டு கொடுக்கலாம். வாங்க அந்த அருமையான தோசை ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இட்லி அரிசி 1 டம்ளர், துவரம் பருப்பு 1/2 டம்ளர், போட்டு நன்றாக இரண்டு மூன்று முறை கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வர மிளகாய் 7, சோம்பு 1 ஸ்பூன், பூண்டு பல் 7, போட்டு இது மூழ்கும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதையம் ஊற வைத்து விடுங்கள். இப்போது இந்த பொருட்கள் எல்லாம் இரண்டு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊறட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஊற வைத்த அரிசி பருப்பை தண்ணீரை வடித்து போட்டுக் கொள்ளுங்கள். பிறகு வர மிளகாய், சோம்பு, பூண்டு, இந்த மூன்று பொருட்களையும் ஊறவைத்த தண்ணீரோடு ஊற்றி இதை அரைக்க வேண்டும். கொஞ்சம் கூடுதலான அளவு அரிசி பருப்பு சேர்த்திருந்தால் கிரைண்டரிலும் போட்டு அரைக்கலாம். அது உங்களுடைய விருப்பம்.

இந்த மாவை லேசான கொரகொரப்போடு அரைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தோசை மொறுமொறுப்பாக வரும். 95% மாவு அரைபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சின்ன ரவை அளவு கொரகொரப்பாக இருந்தால் போதும்.

- Advertisement -

அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். மாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், போட்டு இதை கரைத்து அப்படியே தோசை வார்க்கலாம். நன்றாகத் தான் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் புளிப்பு சுவை இதில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை புளிக்க வைத்த பின் தோசை வார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: கொழு கொழுன்னு இருக்கிறவங்க கூட, கொஞ்ச நாளிலேயே கொள்ளை அழகைப் பெற, கொள்ளு இட்லி பொடியை இப்படி அரைத்து சாப்பிடுங்க.

எப்போதும் போல தான் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடு ஆனதும் இந்த மாவை தோசை கல்லில் ஊற்றி மெலிசாக தீட்டிக் கொள்ளுங்கள். இதன் மேலே நெய் அல்லது எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாக சிவக்க விட்டு அப்படியே எடுத்து பரிமாறி பாருங்கள். இந்த தோசையின் வாசமும் ருசியும் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். வழக்கம் போல இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார், காரச் சட்னி எதை வேண்டுமென்றாலும் நாம் பரிமாறிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் இதில் நாம் வர மிளகாய் பூண்டு சோம்பு சேர்த்து அரைத்து இருக்கின்றோம். குழந்தைகள் இந்த தோசையை வெறுமனே விரும்பி அவர்கள் கையாலேயே எடுத்து சாப்பிட்டுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த தோசை ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா கட்டாயம் உங்க வீட்லயும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -