இப்படியும் கூட காரச் சட்னி அரைக்கலாமா? வித்தியாசமான முறையில் சூப்பரான காரச் சட்னி ரெசிபி உங்களுக்காக.

pudhina-chutney
- Advertisement -

எத்தனை விதவிதமாக காரச் சட்னியை அரைத்து சாப்பிட்டாலும், அலுத்துப் போகவே செய்யாது. சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் இந்த கார சட்னியை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் காரசாரமாக இந்த சட்னியை போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் அத்தனை அருமையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உளுந்து சேர்த்த கார சட்னி ரெசிபி உங்களுக்காக.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் உளுத்தம் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். 2 கைப்பிடி அளவு உளுந்து சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும். உளுந்தை ஒரே மாதிரி பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறத்தில் சிவந்து வரவேண்டும். (உளுந்து சரியாக வறுபடவில்லை என்றால் சட்னி கொழகொழவென பச்சை உளுந்து வாடை வீசும். அதேசமயம் உளுந்து அதிகமாக சிவந்து விட்டாலும், தீய்ந்த வாடை வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வர மிளகாய் – 6 சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அதே கடாயில் சின்ன வெங்காயம் தோலுரித்து – 15 பல், பூண்டு தோல் உரித்தது – 5 பல், இந்த இரண்டு பொருட்களை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதி வந்தவுடன் மீடியம் சைசில் இருக்கும் ஒரு தக்காளி பழம் – 1, உப்பு தேவையான அளவு, நெல்லிக்காய் அளவு – புளி, இந்தப் பொருட்களைப் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். தக்காளிப்பழம் பச்சை வாடை நீங்கும் வரை வதங்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

ஒரு பெரிய தட்டில் எல்லா பொருட்களையும் தனித்தனியாக கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் முதலில் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி சேர்ந்த கலவையை போட வேண்டும். அதன் பின்பு வரமிளகாய் போட்டுக் கொள்ளுங்கள். இந்த எல்லாப் பொருட்களையும் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு வறுத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை சேர்த்து 2 ஓட்டு ஓட்டினால் போதும். உளுந்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கும்போது தான் இந்த சட்னிக்கு நல்ல சுவை கிடைக்கும். உளுந்து ரொம்பவும் மொழுமொழுவென அரைந்து விட்டால், சட்னி கொழகொழவென மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இறுதியாக இந்த சட்னியை மிக்ஸி ஜாரில் இருந்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்தச் சட்னிக்கு 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி கொண்டால் சுவையாக இருக்கும். இட்லிக்கு தோசைக்கும் தேவைப்பட்டால் இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். சாதத்திற்கு கட்டி ஆகவே பரிமாறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த சட்னி ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

பின் குறிப்பு: உங்கள் வீட்டில் கருப்பு உளுந்து இருந்தால் அந்த உளுந்தை வைத்து இந்த சட்னியை செய்தால் உடலுக்கு மிகமிக ஆரோக்கியம். சின்ன வெங்காயம் இல்லாத சமயத்தில் பெரிய வெங்காயம் சேர்த்து இந்த சட்னியை செய்து கொள்ளலாம்.

- Advertisement -