நீண்ட ஆயுள் பெற, தம்பதிகள் ஒற்றுமை ஏற்பட இக்கோயிலில் வழிபட வேண்டும்

oppiliyappan-uppiliyappan

உயிர்கள் அனைத்தும் உயிர்வாழ்வதற்கு அவசியமானது உணவு. அதிலும் மனிதர்கள் மற்ற உயிர்களை காட்டிலும் பலவகையான உணவுகளை சமைத்து உண்ணும் திறன் கொண்டவர்கள். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று சொல்வார்கள் மனிதர்கள் உண்ணும் எந்த ஒரு உணவும் சிறப்பாக இருப்பதற்கு உப்பு அவசியம். ஆனால் மனித வடிவில் வந்த இறைவனே உப்பில்லா உணவை சாப்பிட விருப்பம் தெரிவித்த தலமான “திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்” பற்றிய சிறப்புக்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Perumal

ஒப்பிலியப்பன் கோயில் வரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக இந்த ஒப்பிலியப்பன் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான திருமால் ஒப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பூமா தேவி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் முற்காலத்தில் திருவிண்ணகரம் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் தீர்த்தம் அஹோத்ரபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. வைணவ கோயில்களில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த கோயில்.

தல புராணங்களின் படி திருமாலின் நெஞ்சில் எப்போதும் லட்சுமி தேவி வீற்றிருப்பதை போன்ற பேறு தனக்கும் வேண்டும் என பூமாதேவி தனது கணவரான பெருமாளிடம் கேட்ட போது, பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி எனும் பொருள்படும் திருத்துழாய் என்கிற பெயரில் மகளாக வளரும் போது, தனது இதயத்தில் இடப்பெறும் பேறு கிட்டும் என பெருமாள் வரமளித்தார். மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி தவமிருந்த மார்கண்டேய மகரிஷி துளசி வனத்தில் மகாலட்சமியின் அம்சங்களுடன், குழந்தையாக கிடந்த பூமா தேவியை எடுத்து சென்று துளசி என்று பெயர் சூட்டி தனது மகளாக வளர்க்க தொடங்கினார்.

Perumal

துளசி மணப்பருவம் அடைந்ததும் மகாவிஷ்ணுவாகிய பெருமாள் ஒரு அந்தணர் வேடத்தில் வந்து மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் மகளான துளசியை மணமுடித்து தருமாறு கேட்டார். மார்கண்டேயரோ இளம் வயது பெண்ணான துளசிக்கு உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்ககும் பக்குவம் கூட அறியாதவள் என்பதால் அவளை மணமுடித்து தருவது நன்றாக இருக்காது என்று கூறினார். அந்தணரோ துளசி செய்யும் உப்பில்லாத உணவை தான் சாப்பிட தயார் என்று கூறினார். இப்போது தனது தவ ஆற்றலால் அந்தணராக வந்திருப்பது அந்த திருமால் என்பதை உணர்ந்து தனது மகள் துளசியை அவருக்கே மணமுடித்து தந்தார்.

- Advertisement -

உப்பில்லா உணவை சாப்பிட ஒப்புகொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் இத்தல பெருமாள் பெயர் பெற்றார். துளசி தேவி பெருமாளின் இதயஸ்தானத்தில் துளசிமாலையாக இடம்பெற்றார். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றும் வழக்கம் உண்டானது.

ஒப்பிலியப்பன் கோயில் சிறப்புக்கள்

மார்கண்டேய மகரிஷியிடம் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் திருமால் துளசியை பெண் கேட்டு வந்து, ஐப்பசி மாதத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதால் இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தன்று திருமால் சந்நிதியில் சாம்பிராணி தூபம் கட்டப்பட்டு அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீப ஒளியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே இந்த தீப தரிசனம் செய்பவர்களுக்கு செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது பக்தர்களின் திட நம்பிக்கையாகும். இக்கோயிலில் ஸ்வாமிக்கு காட்டிய தீபத்திற்கு முன்னாள் அருள்வாக்கு கூறும் வழக்கம் இருக்கிறது.

thiruvinnagar

நம்மாழ்வார் இவரை யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர் என மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு பெருமாள் திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் காட்சி தந்தருளியுள்ளார். இந்த கோலங்களில் முத்தப்பன் சந்நிதியை தவிர மற்ற அனைத்து பெருமாள்களுக்கான சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோயிலில் அனைத்து உணவுகளும் உப்பு சேர்க்காமல் தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இக்கோயிலுக்கு உப்பு கலந்த உணவுகளை கொண்டு செல்வதும் தோஷமாக கருதப்படுகிறது.

இக்கோயிலின் தீர்த்தமான அஹோத்ரபுஷ்கரணியில் பகல், இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம் என்பது சிறப்பு அம்சமாகும். மார்கண்டேயர் வசித்த தலம் என்பதால் இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு ஆயுள் கூடுகிறது. இங்கு ஆயுள்விருத்தியை தரும் ம்ரிதுஞ்சய ஹோமமும் செய்யப்படுகிறது.பிரிந்து வாழும் தம்பதிகள், கருத்தொற்றுமை இல்லாத கணவன் – மனைவி இங்கு வந்து வழிபடுவதால் தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் கருத்தாகும்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சை நகரிலிருந்து இவ்வூருக்கு வாகன வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இராவ்வு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்
திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் மாவட்டம் – 612204

தொலைபேசி எண்

435 – 2463385

435 – 2463685

இதையும் படிக்கலாமே:
எறும்பீஸ்வரர் திருக்கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uppiliappan temple history in Tamil. It is also called Oppiliappan koil in Tamil or Uppiliappan kovil in Tamil or Thirunagesehwaram uppiliyappan koil in Tamil or Oppiliappan thirukoil in Tamil.