உளுந்து சட்னி செய்வதற்கு 5 நிமிஷம் கூட ஆகாது ரொம்பவே ஆரோக்கியமான இந்த உளுந்து சட்னி சுவையாக எப்படி செய்வது?

ulunthu-chutney2
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் இந்த உளுந்து சட்னி ரொம்பவே ஆரோக்கியமானது. உளுந்தை பக்குவமாக வறுத்து தக்காளியுடன் சேர்த்து செய்யும் இந்த சட்னியில் வெங்காயம் சேர்க்க தேவையில்லை. வெங்காயம், தேங்காய் என்று எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியை மட்டுமே வைத்து சுவையான உளுந்து சட்னி எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், உளுந்து – 4 டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தக்காளி – 3, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பூண்டு பல் – 2, தாளிக்க எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் ஸ்பூன்,, இடித்த பூண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை.

- Advertisement -

உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் உளுந்து சட்னி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 3 மீடியம் சைஸ் தக்காளி நன்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு முழு வெள்ளை உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உளுந்து கொஞ்சம் கூட கருகிவிடக் கூடாது எனவே குறைந்த தீயில் வைத்து லேசாக பொன்னிறம் வரும் வரை வறுத்து பக்குவமாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் சட்னி ருசியாக இருக்கும். பின்னர் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் உங்கள் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்து இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு ஆற விட்டு விடுங்கள். பின்பு அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த சட்னிக்கு தேவையான உப்பு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். உப்பு சேர்ப்பதால் தக்காளி சீக்கிரம் வதங்கும். தக்காளியின் புளிப்பு சுவையை காட்டிலும் சிறிதளவு சமையல் புளி சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். எனவே ஒரு சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை மூடி போட்டு 2 நிமிடம் வேக வைத்தால் சீக்கிரம் வதங்கி விடும். அதன் பிறகு இவற்றை அப்படியே ஆற விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரை இயக்கி கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆறிய தக்காளி கலவையை சேர்த்து நைஸாக ஒருமுறை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். கடுகு, உளுந்து, நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து கொட்டி இறக்கினால் சூப்பரான ஆரோக்கியம் நிறைந்த உளுந்து சட்னி தயார்! இதை எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -