பொதுவாக வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் இந்த வசந்த பஞ்சமி வராகி அம்மன் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபடும் நாளாக கொள்ளலாம். ஞானம், கலை, கல்வி தரும் சரஸ்வதி தேவியை இந்நாளில் வழிபட்டு பலனடையலாம். அது போல வற்றாத செல்வங்களும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைப்பதற்கு வராகி அம்மனை வழிபடும் முறை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
நாளை பங்குனி மாதம் தேய்பிறை வசந்த பஞ்சமியில் வராகி அம்மனை வழிபாடு செய்தால் வற்றாத செல்வங்கள் கிடைக்கும், வருமானம் உயரும் என்பது ஐதீகம். புதன் கிழமையில் வரக்கூடிய இந்த வசந்த பஞ்சமி ரொம்பவே விஷேஷமானது. வசந்த பஞ்சமியில் அதிகாலையில் எழுந்த நீராடி குளித்து முடித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்து வராகி அம்மன் தாயாரை அலங்கரிக்க வேண்டும்.
வராகி அம்மன் பெண்களை காக்கும் கடவுளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அம்மனை வழிபடும் பெண்களுக்கு திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் உண்டாகும், மனோ பலம், ஆத்ம பலம், தேக பலம் அனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை. வசந்த பஞ்சமியில் வராகி அம்மன் தாயாரை பூக்காளால் அலங்கரித்து வைத்து, தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும். பெண் தெய்வங்களுக்கும், சிறு தெய்வங்களுக்கும் ஏற்றக்கூடிய தீபம் தேங்காய் தீபம்.
வருமானம் உயரவும், தொழில் ரீதியாக முன்னேற்றம் காணவும், செல்வங்கள் பெருகவும் வேண்டி வராஹி அம்மனை நினைத்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயை சரிபாதியாக உடைத்து அதில் இருக்கும் நீரை பூமிக்கு வார்த்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சந்தன குங்குமம் இட்டு, பஞ்சு திரி இரண்டினை திரித்து ஒன்றாக போட்டு தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் விளக்குகளை ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.
வராகி அம்மன் காயத்ரி மந்திரம்:
ஓம் வராகி வித்மஹே,
வரஹி ரூபாயே தீமஹி,
தந்நோ வராகி ப்ரசோதயாத்!!!
வராகி அம்மனின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து பின் தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வராஹி அம்மனை மனதார பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீர்ந்து, வற்றாத செல்வங்கள் ஜீவ நதியாக ஊற்றெடுக்க, வியாபாரம் செழிக்க, தொழிலில் முன்னேற, அலுவலகத்தில் வேலை புரிபவர்கள் பதவி உயர்வு கிடைக்க இப்படி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். வராகி அம்மனுக்கு ரொம்பவும் பிடித்தது பூசணி. பூசணி அல்வா அல்லது பூசணிக்காயால் செய்த நைவேத்திய பிரசாதங்களை படைத்து வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மனபாரம் குறைய லட்சுமி நரசிம்மர் வழிபாடு
காலை 9:30 முதல் 10:30 வரை பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்நாளை ஞானம் பெருக, கலைகளில் சிறந்து விளங்க, கல்வியில் வெற்றி பெறுவதற்கு சரஸ்வதி தாயாரையும் வழிபடலாம். சரஸ்வதி தேவியை அலங்கரித்து, அன்றைய நாள் மஞ்சள் உடை அணிந்துக் கொண்டு, வெள்ளை நிற அன்னபிரசாதங்களை தயார் செய்து வைத்து சரஸ்வதி தேவிக்கு குத்துவிளக்குகளில் நெய் தீபம் ஏற்றி மனதார பிரார்த்தித்துக் கொள்வதால் மேற்கூறிய அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். அற்புத பலன்கள் கொடுக்கக்கூடிய இந்த வசந்த பஞ்சமியில் நீங்களும் இவர்களை வழிபட்டு சிறப்பான பலன்களை அடைய தவறாதீர்கள்.