பாரம்பரிய சுவையில் வத்த குழம்பை ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! பர்ஃபெக்ட் வத்தகுழம்புன்னா அது இதுதான்.

vaththa-kuzhambu
- Advertisement -

நிறைய பேருக்கு வத்த குழம்பு பிடிக்கும். ஆனால் அதை பக்குவமாக பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்பது தெரியாது. அசத்தலான சுவையில் காரசாரமான வத்த குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித் தான் இந்தப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வத்த குழம்பை வைத்து விட்டு, ஒரு குண்டான் சோறு வைத்து விட்டு, இரண்டு வத்தல் வைத்துவிட்டால் போதும். சாதமும் குழம்பும் எப்படி தொண்டைக்குள் போனது என்பதே நமக்கு தெரியாது. சரி ரெசிப்பிக்கு செல்வோம் வாருங்கள்.

puli-karaisal

முதலில் ஒரு எலுமிச்சம்பழம் அளவு உள்ள புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, புளி கரைசலை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள் இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், மிளகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், வரமிளகாய் – 5 லிருந்து 6, காரத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். உளுத்தம் பருப்பும், கடலைப் பருப்பும் சிவந்ததும் மற்ற பொருட்களை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா பொடி மிக்ஸி ஜாரிலேயே இருக்கட்டும்.

masala-podi

அடுத்தபடியாக ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் – 12 லிருந்து 15 தோல் உரித்தது, பூண்டு தோல் உரித்தது – 6 பல், மீடியம் சைஸ் தக்காளி – 1, இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம், பூண்டு பாதி அளவு வதங்கியவுடன், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இந்த கலவையை நன்றாக ஆறியதும், ஏற்கனவே மிக்ஸி ஜாரில் வைத்திருக்கிறோம் அல்லவா மசாலா பொடி, அதனுடன் ஆரிய இந்த விழுதையும் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு குழம்புக்கு தேவையான மசாலா கலவை தயார்.

- Advertisement -

குழம்பு தாளிக்க செல்லலாமா. அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, தோல் உரித்த பூண்டு பல் – 6, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10, இந்த பொருட்களை சேர்த்து வதக்கி விட வேண்டும். இறுதியாக பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து 30 வினாடிகள் வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி விடுங்கள். (எண்ணெயில் கடுகு தாளிப்பதற்கு பதிலாக வெங்காய வடகம் இருந்தாலும் தாளித்துக் கொள்ளலாம்.)

vaththa-kuzhambu2

புளி கரைசலுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு கலந்து, குழம்புக்கு ஒரு மூடி போட்டு 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வையுங்கள். புளியின் பச்சை வாடை நீங்கி விடும். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் இருக்கும் புளி கரைசலுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  ஒருமுறை கலந்து, உப்பு சரிபார்த்து ஒரு மூடி போட்டு நன்றாக மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

vaththa-kuzhambu3

அதாவது குழம்பு நன்றாக கொதித்து சுண்டி மேலே எண்ணொய் பிரிந்து வரும் அளவிற்கு நன்றாக காய வேண்டும். குழம்பு கொதித்துக் கொண்டே இருக்கட்டும். மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் சுண்டைக்காய் வத்தல் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து நன்றாக வறுத்து, எண்ணெயிலிருந்து சுண்டைக்காய் வத்தலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

vaththa-kuzhambu1

குழம்பு நன்றாக கொதித்து தயாரானதும், இந்த வறுத்த சுண்டைக் காய்களை குழம்பின் மீது தூவி நன்றாக கலந்துவிட்டு, மீண்டும் ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் குழம்பை கொதிக்க வைத்தால் போதும். மணக்க மணக்க வத்தக்குழம்பு தயாராகி இருக்கும்.

vaththa-kuzhambu4

சுண்டைக்காய் வத்தலுக்கு பதிலாக மணத்தக்காளி வற்றலை கூட இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த குழம்பை சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் வேறென்ன வேண்டும் வாழ்க்கையில். ஆஹா! அற்புதமான சுவை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -