தக்காளி குருமாவை ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! பாயா டேஸ்ட் இந்தக் குருமாவில் இருக்கும். ஆட்டுக்கால் பாயா பிரியர்கள், மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

paya-kuruma
- Advertisement -

தக்காளி குருமாவை ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு ஸ்டைலில் செய்வார்கள். ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப தக்காளி குருமாவின் ருசியும் மாறும். பக்குவமும் மாறும். இன்று நாம் ஒரு ஸ்பெஷல் தக்காளி குருமா ரெசிபி தான் பார்க்கப் போகின்றோம். இதில் என்ன அப்படி ஸ்பெஷல் என்றால், இந்த குருமாவை பின்வரும் குறிப்பைப் பின்பற்றி செஞ்சு பாருங்க. ஆட்டுக்கால் பாயா டேஸ்ட் கிடைக்கும். இந்த குருமாவை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியை செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. வெறும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் போதும். வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

paya-kuruma1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 கப், முந்திரி பருப்பு – 10, பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 4 லிருந்து 5, மிளகு – 1 டேபிள்ஸ்பூன், பூண்டு – 6 பல் தோல் உரித்தது, இஞ்சி – 2 சிறிய துண்டுகள், சோம்பு – 1 ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி, விழுதுபோல் அரைத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (இந்தக் குருமாவிற்கு மிளகு காரமும், பச்சை மிளகாய் காரம் மட்டும்தான். மிளகாய் தூள் சேர்க்க போவது கிடையாது. காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை உங்கள் விருப்பம் போல் வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து விடுங்கள். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பட்டை- 2, கிராம்பு – 2, கல்பாசி – 1 சிறிய துண்டு, மிளகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 2 இந்த பொருட்களை சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விடுங்கள்.

paya-kuruma2

மசாலா பொருட்கள் அனைத்தும் பொரிந்து சிவந்தவுடன், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மீடியம் சைஸ் வெங்காயங்களை, குக்கரில் சேர்த்து 3 நிமிடம் போல நன்றாக வதக்கி விட வேண்டும். அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய 3 தக்காளி பழங்களை வெங்காயத்துடன் சேர்த்து லேசாக வதக்கினால் போதும். தக்காளி ஆங்காங்கே பார்ப்பதற்கு தெரிய வேண்டும். தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தக்காளி வதங்கியதும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை குக்கரில் ஊற்றி, இந்த குருமாவுக்கு தேவையான தண்ணீரை ஊற்றி, தேவையான உப்பு போட்டு ஒரு முறை நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி 3 விசில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

paya-kuruma3

குக்கரில் விசில் வரும்போது உங்களுக்கு பாயா வாசனை வரும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி, அப்படியே குருமாவை சுட சுட பரிமாறி சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசி அட்டகாசமாக இருக்கும். ஆட்டுக்கால் பாயா உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த பாயாவும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கத்தான் செய்யும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -