ஹோட்டல் ஸ்டைலில் வெஜிடபிள் சால்னா செய்வது எப்படி? குக்கரில் இதை செய்ய, வெறும் 15 நிமிடமும், 2 விசிலும் போதுமே.

veg-salna
- Advertisement -

சப்பாத்தி, பரோட்டா, தோசை, இட்லி இவைகளுக்கு தொட்டு சாப்பிட ஒரு வெஜிடேபிள் சால்னா ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காரசாரமான வெஜிடேபிள் சால்னாவை இப்படி வைத்தால், இதனுடைய மணமும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். அதுவும் மிக மிக சுலபமான முறையில் கஷ்டமே இல்லாமல் பதினைந்தே நிமிடத்தில் இந்த சால்னாவை எப்படி வைப்பது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

veg-salna1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 கப், முந்திரி – 10, பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, காலிபிளவர், உங்களுக்கு தேவையான காய்கறிகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து வெட்டி தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

veg-salna2

அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு – 1/2 ஸ்பூன், கிராம்பு – 2, கல்பாசி – சிறிய துண்டு, நட்சத்திர சோம்பு – 1, ஏலக்காய் – 2, பட்டை – 1 சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 கீனியது, இந்த பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

- Advertisement -

குக்கரில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்றாக பொரிந்து வந்தவுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்துடன் – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும், சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு பச்சை வாடை நீங்கிய பின்பு, பொடியாக நறுக்கிய – 1 பெரிய தக்காளிப் பழத்தையும், சேர்த்து வதக்க வேண்டும்.

veg-salna3

தக்காளி வதங்கியவுடன் ஒரு கைப்பிடி அளவு புதினாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடுங்கள் போதும். அடுத்தபடியாக தயாராக வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை குக்கரில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்துவிட வேண்டும். இரண்டு நிமிடம் காய்கறிகளை எண்ணெயில் வதக்க வேண்டும்.

அடுத்தபடியாக மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி ஒரு நிமிடம் எண்ணெயில் லேசாக கிளறி விட்டு, சால்னாவிற்கு நமக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி விசில் போட வேண்டும். இரண்டு விசில் வைத்தால் போதும்.

veg-salna5

விசில் வந்த பிறகு, பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பாருங்கள். சூப்பரான சால்னா தயாராகியிருக்கும். இதன் மேலே கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறினால் இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகிவிடும். இந்த வாசத்திற்கு உங்கள் மூக்கும் அடிமையாகி விடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -