மணக்க மணக்க கத்தரிக்காய் முருங்கைக்காய் போட்டு அருமையான சாம்பார் ஒருமுறை இப்படி வச்சு தான் பாருங்களேன்.

sambar1
- Advertisement -

கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் தான் வைக்கத் தெரியும். அடிக்கடி நம் வீட்டில் செய்வோமே. இதில் என்ன புதுமை என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த குறிப்பை படிச்சு பாருங்க. இதேபோல உங்க வீட்ல ஒருமுறை சாம்பார் வச்சு பாருங்க. நிச்சயமாக நீங்கள் வைக்கும் சாம்பாருக்கும் இந்த சாம்பாருக்கும் வித்தியாசம் தெரியும். நேரத்தைக் கடத்தாமல் ரெசிப்பிக்குள் செல்வோம்.

முதலில் எலுமிச்சம் பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளி கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த புளி கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடியைப் போட்டு, கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போட்டு, சீரகம் 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் 2 பல் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து 150 கிராம் அளவுள்ள துவரம்பருப்பை குக்கரில் போட்டு, 3 அல்லது 4 விசில் விட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த பருப்பும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம் – 1/4 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10 பல், பச்சை மிளகாய் – 2, வெட்டிய முருங்கைக்காய் – 1, வெட்டிய கத்திரிக்காய் – 3, கறிவேப்பிலை – 2 கொத்து, தேவையான அளவு உப்பு போட்டு, இந்த காய்களை எண்ணெயிலேயே வதக்கி சாம்பார் பொடி போட்டு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, 2 நிமிடம் போல கொதிக்க வையுங்கள். காய்கறி முக்கால் பாகம் இந்த புளி தண்ணீரிலேயே வேகட்டும்.

அதன் பின்பு வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு சாம்பாரை கொதிக்க வையுங்கள். சாம்பாருக்கு உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாம்பார் பருப்போடு சேர்ந்து தளதளவென கொதி வந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி மீண்டும் 3 நிமிடம் போல மிதமான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இறுதியாக இதற்கு மணக்க மணக்க தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் வைத்து நெய் – 1 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 3, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லி தழைகளைத் தூவி கலந்து வைத்து சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -