தேங்காய், தக்காளி எதுவும் சேர்க்காத ‘வெங்காய பொட்டுக்கடலை சட்னி’ எப்படி ருசியாக தயாரிப்பது?

onion-pottukadalai-chutney_tamil
- Advertisement -

தேங்காய், தக்காளி போன்றவை இல்லாமல் சட்னி செய்வது என்பது சிரமமாக இருக்கும். வெறும் வெங்காயமும், பொட்டுக்கடலையும் இருந்தால் நொடியில் ருசியான சட்னி செய்து அசத்தலாம். இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல், உப்புமா போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ள ரொம்பவே சுவையாக இருக்கக் கூடிய இந்த சட்னியை சுலபமாக அரைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, வரமிளகாய் – நான்கு, பொட்டுக்கடலை – ஒரு கைப்பிடி, புளி – சிறு கோலிகுண்டு அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

- Advertisement -

செய்முறை விளக்கம்

முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு லேசாக காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வரும் பொழுது ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கி வரும் பொழுது அதனுடன் உங்கள் காரத்திற்கு தகுந்தாற் போல வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு வதங்கிய பிறகு, ஒரு கைப்பிடி அளவிற்கு பொட்டுக் கடலையை சேர்த்து வதக்குங்கள். இதில் தேங்காய் மற்றும் தக்காளி போன்ற பொருட்களை சேர்க்கப் போவது இல்லை எனவே புளிப்பிற்காக ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

சட்னி அரைப்பதற்கு தேவையான இந்த பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்ல உருளைக்கிழங்கு இருந்தா குழந்தைகளுக்கு நல்லா மொறு மொறுன்னு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க. ஒரு முறை இதை செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா போதும் இனி இதை கடையில அதிக காசு வாங்கி சாப்பிடவே மாட்டாங்க.

பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி அதில் சேருங்கள். படபடவென பொரிந்து வரும் பொழுது, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து வைத்தால் இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும். ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த சட்னியை பொங்கல், கிச்சடி போன்றவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். நீங்களும் இதே மாதிரி சுலபமாக சட்னி செய்து பாருங்க, உங்க வீட்டில் இருப்பவர்களை அசத்துங்க!

- Advertisement -