கிராமத்து ஸ்டைலில் புதினா துவையல் 10 நிமிடத்தில் அரைப்பது எப்படி? இப்படி ஒரு முறை புதினா துவையல் செஞ்சா 10 இட்லி கூட சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருக்கலாமே!

puthina-thuvaiyal
- Advertisement -

விதவிதமான துவையல்களில் எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்தமான ஒரு துவையல் ‘புதினா துவையல்’ ஆகும். இந்த புதினா துவையல் சுவை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. ஜீரண சக்திக்கு நல்ல ஒரு உணவாக இருக்கும் இந்த புதினா துவையலை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நலம் தேறும்! சுவையான புதினா துவையல் கிராமத்து ஸ்டைலில் சுலபமாக எப்படி வீட்டில் செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

புதினா துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – ஒரு கட்டு, புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், காஞ்ச மிளகாய் – 10, நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

புதினா துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கட்டு புதினாவை நன்கு சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். புதினா கட்டில் இருந்து ஒவ்வொரு குச்சியாக எடுக்கும் பொழுது ஒருமுறை கைகளால் தட்டி விடுங்கள். அதில் சிறு சிறு பூச்சிகள் ஏதாவது இருந்தால் கீழே விழுந்து விடும். ஆய்ந்து எடுத்த எல்லா இலைகளையும் நன்கு தண்ணீரால் அலசி சுத்தம் செய்து வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். நல்லெண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிக்க விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து ஓரளவுக்கு வறுபடும் பொழுது காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவுகளை கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மிளகாய் லேசாக வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய இந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை போட்டு சுருள வதக்கி விடுங்கள். புதினா இலைகள் சுருண்டதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் இதையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொள்ளுங்கள். ஊற வைத்த புளியையும் தண்ணீருடன் அப்படியே சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கூடுதலாக தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது, துவையல் கெட்டியாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே
எப்பவும் ஒரே மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியசமான முறையில் இந்த பக்கோடா குழம்பை செய்து தான் பாருங்களேன், டேஸ்ட் வேற லெவெல்ல இருக்கும்.

பின்னர் அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்ததும் இந்த அரைத்த விழுதையும் சேர்த்து ரெண்டு நிமிடம் லேசாக வதக்கி விடுங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான இந்த புதினா துவையல் ரெசிபி கிராமத்து ஸ்டைலில் தயார்! இதனுடன் கலவை சாதங்கள் அல்லது இட்லி, தோசை போன்றவற்றை வைத்து சாப்பிடும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -