உடம்பிற்கு ஆரோக்கியம் கொடுக்கும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவையில் ஒருமுறை இவ்வாறு சாம்பார் சாதம் செய்து பாருங்கள். நாவில் எச்சில் ஊறுகின்ற சுவையில் அற்புதமாக இருக்கும்

sambar-rice
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் உடல் ஆரோக்கியம் என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருக்கிறது. பார்ப்பதற்கு அழகாக தோற்றமளித்தாலும் இருபது, முப்பது வயதைத் தாண்டிய உடனேயே பிபி, கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி, மூட்டு வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விடுகின்றன. நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் 80 வயதிலும் தளராமல் நடை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான வியாதிகள் வந்துவிடுகின்றன. மருத்துவர்களின் அறிவுரைப்படி நமது உணவு பழக்கத்தை மாற்றினால் மட்டுமே இவ்வாறான உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும். அதற்காக சிறு தானியங்களை நமது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாகும். அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோதுமை ரவையில் செய்யக்கூடிய சுவையான சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

varagu

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – முக்கால் கப், துவரம் பருப்பு – முக்கால் கப், சாம்பார் பொடி – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, பூண்டு – 5 பல், கத்தரிக்காய் – 1, முருங்கைக்காய் – 1, கேரட் – 1, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் முக்கால் கப் துவரம் பருப்பை கழுவி, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, புளி கரைசல் எடுத்து வைக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

thuvaram-paruppu

பின்னர் ஒரு குக்கரை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொண்டு, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி காய்கறிகளை சேர்த்து அவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் 3 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கலந்து விட்ட பின்னர், ஊற வைத்துள்ள துவரம் பருப்பை இவற்றுடன் சேர்க்க வேண்டும். பிறகு முக்கால் கப் கோதுமை ரவையையும் தண்ணீர் ஊற்றி கழுவி இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

sambar-rice

பிறகு 3 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதி வந்ததும், கொத்தமல்லி தழையை தூவி, குக்கரை மூடி, விசில் போட்டு, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு குக்கரில் பிரஷர் குறைந்ததும், குக்கர் மூடியைத் திறந்து ஒரு முறை கலந்துவிட்டு பரிமாறி கொடுத்துப் பாருங்கள். இதன் சுவைக்கு வீட்டில் உள்ள அனைவரும் உங்களை நிச்சயம் பாராட்டுவார்கள்.

- Advertisement -