தக்காளி சேர்க்காமல் அசத்தலான காரச் சட்னி செய்து இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். நாக்கில் எச்சில் ஊறும் சுவையில் சூப்பராக இருக்கும்

chutni
- Advertisement -

பொதுவாகவே காலை மாலை உணவாக அனைவரது வீட்டிலும் செய்யக்கூடியது இட்லி மற்றும் தோசை தான். அதிலும் இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதேனும் ஒரு சட்னி வகைகள் செய்து வைப்பார்கள். ஏனென்றால் சட்னி செய்வது தான் மிகவும் எளிமையான மற்றும் நேரம் குறைவாக செய்யக் கூடிய உணவு வகையாகும். அதிலும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சிறந்த சைட் டிஷ் சட்னி மட்டும் தான். சட்னியில் பல வகை சட்னிகள் இருக்கிறது. அதிலும் காரசாரமாக செய்யக்கூடிய சட்னிகள் தான் இவற்றிற்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். அவ்வாறு தக்காளி சேர்க்காமல் வெங்காயம், பூண்டு, காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து செய்யக்கூடிய இந்த கார சட்னியை ஒரு முறை செய்து ருசித்து விட்டால், மீண்டும் அடிக்கடி இதனைத்தான் செய்து கொண்டே இருப்பீர்கள். வாருங்கள் இந்த கார சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – 20, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், வர மிளகாய் – 5, உப்பு – ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் பத்து பல் பூண்டு மற்றும் 20 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, சுத்தம் செய்து, தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

கடாய் நன்றாக சூடேறியதும் அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். நல்லெண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு வெட்டி வைத்துள்ள வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். இவை மூன்றும் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றை ஒரு தட்டிற்க்கு மாற்றி நன்றாக ஆற வைக்க வேண்டும். இவை அனைத்தும் ஆறிய பிறகு இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். நல்லெண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் நொடிப்பொழுதில் சுவையான கார சட்னி தயாராகிவிட்டது. இதனை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட, போதும் என்று சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -