குக்கரில் ஒரு விசில் வைத்தால் போதும். சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயாராகிவிடும். இதனை சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

sambar
- Advertisement -

வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவசர அவசரமாக இரவு உணவை தயார் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு வேலை குறைவாகவும் சட்டெனவும் செய்யக்கூடிய ஏதேனும் ஒரு உணவை சமைத்த விட்டால், சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியும் என்று தோன்றும். எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் தோசைக்குத் தொட்டுக்கொள்ள தக்காளி, வெங்காயம் சேர்த்து பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பாசி பருப்பு சாம்பாரை செய்துவிட்டால் போதும். சுவையும் அருமையாக இருக்கும். வேலையும் சட்டென முடியும். இந்த சாம்பாரின் சுவைக்கு இரண்டு தோசை சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அருமையான சுவையில் இருக்கும். இங்கு 4 பேர் சாப்பிடும் அளவிற்கு ஏற்ற வகையில் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ஒரு கப், சின்ன வெங்காயம் – 15, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 4, வரமிளகாய் – 3, மோர் மிளகாய் – 3, மஞ்சள்தூள் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் பாசிப்பருப்பை குக்கரில் சேர்த்து, அதனை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி, அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி, அடுப்பின் மீது வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து பருப்பு கடையும் மத்து வைத்துக் கடைந்துவிட வேண்டும்.

- Advertisement -

அதன்பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வரமிளகாய் மற்றும் மோர் மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கி இவற்றுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு வீட்டில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பின்னர் கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்டு, 5 நிமிடம் நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயாராகிவிடும்.

- Advertisement -