இதை விட சுலபமாக சாம்பார் சாதம் யாராலும் செய்யவே முடியாது. வெறும் 15 நிமிடத்தில் சூப்பரான சாம்பார் சாதம் செய்வது எப்படி.

bisibelabath
- Advertisement -

நிறைய பேர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி என்றால் அந்த வரிசையில் இந்த சாம்பார் சாதத்திற்கு முதலிடம் உண்டு. சாம்பார் இல்லாத பந்தியே இல்லை என்று சொல்லலாம். சைவ விருந்தில் முதல், முக்கிய பங்கு வகிக்க கூடிய இந்த சாம்பார் சாதத்தை மிக மிக சுலபமாக குக்கரில் எப்படி செய்வது என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் கொஞ்சம் காய்கறி இருக்கா. சட்டுனு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

pachcharisi

முதலில் ஒரு குக்கரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் புழுங்கலரிசி 1 கப், துவரம்பருப்பு  1/2 கப், அதாவது 200 கிராம் புழுங்கல் அரிசி எடுத்துக்கொண்டால், 100 கிராம் துவரம்பருப்பு சரியாக இருக்கும். ஆகமொத்தம் அரிசியும் பருப்பும் சேர்த்து 1 1/2 கப் எடுத்து இருக்கின்றோம் அல்லவா. இந்த 1 1/2கப் அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதாவது 6 கப் தண்ணீர் நமக்கு தேவைப்படும். எந்த கப்பில் அரிசியை அளந்து எடுத்தீர்களோ அதே கப்பில் 6 கப் தண்ணீர் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குக்கரில் இருக்கும் அரிசி பருப்பை நன்றாக அலசி கழுவி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, 15 லிருந்து 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அரிசியும் பருப்பும் ஊறுவதற்குள் இந்த சாதத்திற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். சாம்பார் சாதம் என்றால் கத்திரிக்காய், முருங்கைக்காய், கட்டாயம் தேவை. இதுதவிர முள்ளங்கி, சவுச்சவ், அவரக்காய், இப்படி உங்கள் வீட்டில் எந்த காய்கறி இருந்தாலும் அதை சாம்பாருக்கு வெட்டுவது போல வெட்டி குக்கரில் ஊறிக் கொண்டிருக்கும் அரிசி பருப்புடன் சேர்த்து விடுங்கள். (காய்கறிகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூடவோ குறையவோ சேர்த்துக் கொள்ளலாம்.)

bisibelabath

அடுத்தபடியாக மீடியம் சைஸில் பொடியாக வெட்டிய 2 தக்காளி, தோல் உரித்த சின்ன வெங்காயம் 10 பல், பச்சை மிளகாய் 2, மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், சாம்பார் பொடி 2 ஸ்பூன், சாம்பார் சாதத்திற்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 லிருந்து 5 விசில் மிதமான தீயில் விட்டால், சாம்பார் சாதம் சரியான பக்குவத்தில் நமக்கு வெந்து வந்துவிடும்.

- Advertisement -

இதில் நாம் புளி கரைசலை ஊற்ற வில்லை. சிறிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு, கரைத்து அந்த புளிக் கரைசல் தண்ணீரை குக்கரில் வெந்திருக்கும் சாதத்தோடு ஊற்றி கலந்து அடுப்பில் சிம்மில் வைத்து, சாதத்தை சூடு செய்ய வேண்டும். அந்த சூட்டிலேயே புளியின் பச்சை வாடை முழுமையாக நீங்க வேண்டும். புளிக்கரைசலை சாம்பார் சாதத்தோடு ஊற்றி 5 நிமிடத்தில் இருந்து 7 நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

bisibelabath1

சாம்பார் சாதத்தை சூடாக இருக்கும் போதே கரண்டியை வைத்து கொஞ்சம் குழைய கலந்து விடுங்கள். இந்த சாம்பார் சாதத்திற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய், 4 ஸ்பூன் எண்ணெய், ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு 1/2 ஸ்பூன், வெந்தயம் 1/4 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், வர மிளகாய் 1, கறிவேப்பிலை 1 கொத்து, பெருங்காயம் 1/4 ஸ்பூன், முந்திரி பருப்பு போட்டு நன்றாக வறுத்து இந்த தாளிப்பை அப்படியே சாம்பார் சாதத்தில் கொட்டி கலந்து விடவேண்டும். இறுதியாக இந்த சாம்பார் சாதத்தின் மேல் கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட ஒரு அப்பளம் வைத்து பரிமாறி பாருங்கள். அட்டகாசமான சுவை இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்டில மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -